
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் இயக்குநராகவும் அறியப்படுகிறார். பன்முகத் திறமை கொண்ட தனுஷ், தனது கடின உழைப்பின் மூலமாகவே வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ஒருமுறை கதை ஒன்றை எழுதி அதில் தனுஷுடன் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் இதற்கு தனுஷ் பச்சைக்கொடி காட்டவில்லையாம். இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய காரணமே இருக்கிறது.
தற்போது கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் தனுஷுக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்களில் தனுஷை இயக்கி வெற்றி கண்டுள்ளார் வெற்றிமாறன். அதிலும் குறிப்பாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
சமீப காலமாக தனுஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் மற்றும் ராயன் திரைப்படங்கள் இரண்டுமே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தன. இதில் ராயன் படத்தை இயக்கியது தனுஷ் தான். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் திரைக்கு வந்தது. மேலும் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
தனுஷின் சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த ஆடுகளம் படத்தில் இவரது நடிப்பு எந்த அளவிற்கு பாராட்டைப் பெற்றதோ, அதே அளவிற்கு பேட்டைக்காரனாக நடித்த ஜெயபாலனின் நடிப்பும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. பேட்டைக்காரன் கதாபாத்திரத்திற்கு முதலில் பார்த்திபனைத் தான் தேர்வு செய்தார் இயக்குநர் வெற்றிமாறன். இதற்காக பார்த்திபனை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் பேட்டைக்காரனாக நடிக்க பார்த்திபன் மறுத்து விட்டார்.
வெற்றிமாறன் பலமுறை அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்காமல் போனது. ஆடுகளம் திரைப்படம் திரைக்கு வந்த பிறகு மெகா ஹிட் வெற்றியைப் பெற்றது. அதிலும் பேட்டைக்காரனாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நிச்சயமாக ஆடுகளம் படத்தை மிஸ் செய்து விட்டோமோ என்று வருந்தியிருப்பார் பார்த்திபன்.
சில மாதங்களுக்குப் பின் ஒரு கதையை எழுதி இருக்கிறார் பார்த்திபன். இந்தக் கதையில் தனுஷுடன் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என பார்த்திபன் நினைத்தார். அதற்காக செல்வராகவனை அணுகியுள்ளார் பார்த்திபன். நீங்கள் சீனியர் இயக்குநர் என்பதால், தனுஷ் உங்கள் படத்தில் நடிக்க தயங்குகிறார் என செல்வராகவன் பார்த்திபனிடம் கூறியுள்ளார். ஆனால் ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடிக்க மறுத்ததால் தான், இப்போது பூமராங் மாதிரி எனக்கு திருப்பி அடிக்கிறது என நினைத்தாராம் பார்த்திபன்.
1990-களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோலிவுட்டில் தடம் பதித்தவர் பார்த்திபன். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. பிறகு இயக்குநராகவும் சில படங்களை இயக்கியிருக்கிறார் பார்த்திபன். தற்போது குணச்சித்திர நடிகராக அவ்வப்போது நடித்து வருகிறார்.