
18 வயதில் கட்டாயத்தின் பேரில் நடிகராகி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். சமீபத்தில் இவரது நடிப்பில் 50வது படமான ராயன் வெளியாகி, ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷின் ஆசை பெரிய நடிகராக வேண்டும் என்பது அல்ல. இந்திய அளிவில் பெரிய சமையல் கலை நிபுணராக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் இருந்த தனுஷுக்கு, சினிமாவின் கதவுகள் தானாகவே திறந்தன. அவ்வகையில் தனுஷ் நடிகராக மாறிய சுவாரஸ்யமான தகவலை இங்கு பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தனுஷ். இவரின் அபாரமான நடிப்புத் திறனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் உதவியுடன் தான் சினிமாவில் நுழைந்தார் தனுஷ். நுழைந்தார் என்று சொல்வதைக் காட்டிலும், வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டார் என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களான துள்ளுவதோ இளமை மற்றும் காதல் கொண்டேன் ஆகியவற்றில் கட்டாயத்தின் பேரில் தான் நடித்தார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிக்க 18 வயது ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா. ஆனால் யாருமே கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வதென்று வழி தெரியாமல் நின்றார். அந்த நேரத்தில் படத்திற்கு திரைக்கதை எழுதிய தனுஷின் அண்ணன் செல்வராகவன் தான், வேறு வழியின்றி தனுஷை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். இதனை சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவனே தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சிறிய வயதில் இருந்தே செஃப் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த தனுஷை சினிமாவில் நுழைத்ததே நான் தான். அவர் நன்றாக சமைப்பாரா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன். அந்த நேரத்தில் ஹீரோவாக நடிக்க யாரும் கிடைக்காததால், தனுஷை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்” என்று கூறினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் துள்ளுவதோ இளமை. முதல் படமே வெற்றித் திரைப்படமாக அமைந்ததால், அடுத்த ஆண்டே செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்தார். தனுஷின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் இதுதான். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டினார் தனுஷ்.
அதனைத் தொடர்ந்து திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், 3, அசுரன் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
50 படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இவரது நடிப்பில் குபேரா திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக விரைவில் வெளியாக உள்ளது. விருப்பமே இல்லாமல் சினிமாவிற்குள் வந்தாலும், செய்யும் வேலையில் மிகந்த ஈடுபாட்டுடன் இருப்பதால் தான், தனுஷ் இன்று உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறார்.