
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உண்டு. கிரிக்கெட் களத்தில் தனது கேப்டன்ஷியால் ரசிகர்களின் இதயத்தை வென்ற தோனி, தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் ரசிகர்களால் ‘தல’, ‘கேப்டன் கூல்’ என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் தோனி நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கும் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் நிலையில் அவ்வப்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவர் எது செய்தாலும் இணையத்தில் உடனே வைரலாகும்.
தோனியின் மனைவி சாக்ஷியின் ‘தோனி என்டெர்டெயின்மென்ட்' என்ற பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் ஹரிஷ் கல்யாண்-இவானா நடித்த ‘எல்.ஜி.எம்.' படத்தை தயாரித்தார்.
அதுமட்டுமின்றி சென்னையில் '7Padel' என்ற புதிய விளையாட்டு மற்றும் ஆரோக்கிய மையத்தையும் திறந்துள்ளார். இப்படி மிகவும் பிஸியாக வலம் வரும் தோனி தற்போது பாலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.
தோனி நடிகர் மாதவனுடன் இணைந்து கமாண்டோ உடையில், கையில் துப்பாக்கி, கருப்பு கண்ணாடியுடன் ஒரு சிறப்பு அதிரடி படை அதிகாரிகளை போல் நடித்துள்ள ‘தி சேஸ்' (The Chase) என்ற புராஜெக்ட்டின் மிரட்டலான டீசர் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த டீசரை பார்த்த ரசிகர்கள், ‘கேப்டன் கூலில் இருந்து ஆக்ஷன் ஹீரோ’ என தங்கள் மகிழ்ச்சியை கமெண்ட்ஸ் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் இது தோனியின் பாலிவுட் என்ட்ரியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும், இது ஒரு திரைப்படமா, வெப் சீரிஸா அல்லது ஒரு பிரம்மாண்டமான விளம்பர படமா என்பது குறித்த முழுமையான தகவல் இல்லை.
இந்த டீசரை, இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் வாசன் பாலா, சமூகவலைதளத்தில் பகிரும்போது, ‘பிளாக்பஸ்டர் தயார்! ஜாம்பவான் எம்.எஸ். தோனி, மாதவன் மற்றும் விராஜ் கெலானியுடன் இணைகிறார். சேஸிங் தொடங்குகிறது!’ என குறிப்பிட்டு, அதன் ஹேஷ்டேக்குகளில் #MSDhoniBollywoodDebut என்று பதிவிடப்பட்டுள்ளது. இதுவே இந்த டீசர் ஒரு திரைப்படத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்ற வதந்தியை உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேவேளையில் இந்த புதிய படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எது,எப்படியோ ‘தல’ தோனியை இதுவரை கிரிக்கெட்டில் ரசித்த ரசிகர்கள் இனிமேல் சினிமாவிலும் கொண்டாட உள்ளனர்.