
சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி சென்னையில் '7Padel' என்ற புதிய விளையாட்டு மற்றும் ஆரோக்கிய மையத்தை திறந்துள்ளது இளைஞர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்போர்ட் சென்டர், ECR பகுதியில், Alphabet என்ற பள்ளிக்கு அருகில் பாலவாக்கத்தில் அமைந்துள்ளது.
தோனிக்கு சென்னை மிகவும் ஸ்பெஷலான இடம் என்பதால் எதைத் தொடங்குவதாக இருந்தாலும், அதனை சென்னையில் இருந்தே தொடங்குவார். தோனியின் சினிமா தயாரிப்பு நிறுவனம் கூட தனது முதல் படத்தை தமிழில் இருந்துதான் தொடங்கியது என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.
சுமார் 20,000 அடி பரப்பளவில் தோனி தொடங்கி இருக்கும் ஸ்போர்ட்ஸ் சென்டர் நிச்சயமாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தோனிக்கு மற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் அதிகளவு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தோனியை பிடிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக '7Padel' விளையாட்டு மையம் பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அந்த வகையில் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள '7Padel' புதிய விளையாட்டு மையத்தில் 3 பேடில் கோர்ட்(டென்னிஸ் + ஸ்குவாஷ் இணைந்ததை போன்ற ஆட்டம்), பிக்கிள் பால் கோர்ட், ஒரு நீச்சல் குளம், ஒரு உடற்பயிற்சி கூடம், உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுக்கும் சிறப்பு அறை, கஃபே மற்றும் நீராவிக் குளியல் உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த '7Padel' ஸ்போர்ட்ஸ் சென்டர் பற்றி தோனி கூறுகையில், 'சென்னை எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெசலான இடம்தான். சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. கிரிக்கெட்டுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி சென்னை எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதனாலேயே என்னுடைய முதல் ஸ்போர்ட்ஸ் சென்டரை சென்னையில் தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த Paddle ஆட்டம் சுவாரஸ்யமானது. தொழில் முறை வல்லுநர்கள் மட்டுமன்றி, அனைவரும் இந்த விளையாட்டை ஆட முடியும். விளையாட்டு வீரர்கள், குடும்பங்கள் மற்றும் பிட்னஸ் மீது ஆர்வமுள்ளவர்களுக்கும் இது தங்களுக்கான இடம் என்பதை உணரும் விதமாக '7Padel' இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தோனி கூறினார்.
இந்த ஸ்போர்ட்ஸ் சென்டரை திறந்து வைத்து விளம்பரம் செய்வதற்காக தான் தோனி ஒரு வாரமாக சென்னையில் தங்கி இருந்தார். இந்த விளம்பர நிகழ்ச்சியில் தோனியுடன் இசையமைப்பாளர் அனிருத்தும், சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஒரே இடத்தில் இத்தனை வசதிகளுடன் ஸ்போர்ட்ஸ் சென்டர் திறக்கப்பட்டுள்ளதால், சென்னைவாசிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.