மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் தென்னிந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய இப்படம், ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் தனுஷை கதாநாயகனாக வைத்து கர்ணன் படம் இயக்கினார். இப்படமும் தமிழக ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப்பெற்றது. அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் படம், மாரி செல்வராஜ் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.
இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. மாரி செல்வராஜ், தான் இயக்கிய மூன்று படங்களிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவரும் படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். அந்தவகையில், இவர்கள் இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது.
துருவ் விக்ரம் அதற்காக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இதனையடுத்து மாரி செல்வராஜ் மற்றும் துருவ் ஆகியோர் இணையும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
பா.இரஞ்சித் மற்றும் அப்லாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் அனுபமா பரமேஷ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கைப் பற்றிய உண்மைக் கதையைத் தழுவி உருவாகும் படமாகும்.
இந்த நிலையில் ‘பைசன்’ படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தீப்பிடித்து எரியும் வனத்திற்குள்ளிருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளமாடன் (பைசன்)” என்ற வரிகளை குறிப்பிட்டு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.