விமர்சனம்: துரந்தர் தி ரிவெஞ்ச் - நான்கு மணி நேர ஆக்க்ஷன் அமர்க்களம்!

Dhurandhar The Revenge
Dhurandhar The Revenge
நா.மதுசூதனன்

படிப்பு: பி காம் மற்றும் இதழியல் முதுநிலை டிப்ளமோ. ஆர்வம்: கட்டுரை/சிறுகதைகள் எழுதுதல் பிடித்தது : சினிமா, ஓ டி டி, நாடகங்கள்குறித்த விமர்சனங்கள் எழுதுதல். கிரிக்கெட், டென்னிஸ் தொடர்பான கட்டுரைகள். மெட்ராஸ் பேப்பர் என்ற இணைய வார இதழில் கடந்த இரண்டாண்டுகளாகவும் ஜூலை 2024 முதல் கல்கி ஆன்லைனிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். மிஸ்டர் சம்சாரி என்ற பெயரில் முகநூலில் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதி வருகிறேன். பொழுதுபோக்கு: தமிழ், ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது, கிரிக்கெட் பார்ப்பது.

Updated on: 

நான்கு மணி நேரம் ஓடும் படம். வெற்றிகரமான படத்தின் இரண்டாம் பாகம். அதிகமாகத் தெரியாத நடிகர்கள். ஆயிரம் கோடி வசூலித்த முதல் பாகம் அளவு இருக்குமா. இப்படிப் பல விஷயங்களுக்குப் பதில் சொல்லியிருக்கும் படம் தான் துரந்தர் தி ரிவெஞ்ச்.

பொதுவாகவே இரண்டாம் பாகம் வெற்றி பெறாது என்ற கெட்ட பெயர். அதை உடைத்தாக வேண்டும் என்ற கட்டாயம். அதை ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா தர்.

முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தின் கதை என்ன என்பது தெரிந்திருக்கும். விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது படம். தீவிரவாதக் கூட்டத்தில் ஊடுருவி அந்த மொத்த நெட் ஓர்கையே அழிக்கும் வேலை நாயகன் ரண்வீர் சிங்குக்கு. ஹம்சா அலி / ஜஸ்கிரத் என்று இரண்டு பாத்திரப் படைப்புகள். ஜஸ் கிரத் எப்படி ஹம்சா ஆகிறான் என்று தொடங்குகிறது. இந்தப் படத்தில் எப்படிச் சண்டைக்காட்சிகள் ரத்தம் தெறிக்க இருக்கப் போகின்றது என்பதைக் கோடிட்டுக் காட்டி விடுகிறார்கள். அதன் பிறகு வன்முறையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது.

நான்கு மணி நேரப்படம் என்று முடிவு செய்த பிறகு தொய்வு என்பதைத் தவிர்க்க முடியாது. கதையும் பெரிதாக மாற்ற முடியாது. திரைக்கதையும் மேக்கிங்கும் தான் பலம் என்று முடிவு செய்து இறங்கியிருக்கிறது இந்த குழு. முதல் காட்சியிலிருந்து தீயாய்ப் பறக்கிறது படம். ஒரு சண்டை முடிந்தால் அடுத்து என்று ஆக்ஷன் அதிரடி தான்.

லயாரி என்ற அந்த பாகிஸ்தான் நகரம். அதை ஆளும் கேங் தான் பாகிஸ்தானையே ஆட்டிப் படைக்கும். அப்படி ஒரு கும்பலின் தலைவர் தான் அக்ஷய் கன்னா. அவரைத் தன் முதல் பாகத்தில் போட்டுத் தள்ளுகிறார் ரண்வீர், அந்தக் கும்பலின் தலைவனாக ஆவதன் மூலம் மற்ற தீவிர வாதக் கும்பலுக்கும் எப்படித் தலைவராகிறார். எப்படி ஒவ்வொன்றாக அழிக்கிறார் என்று பரபரவென்று சொல்லியிருக்கிறார்கள்.

ரண்வீர் அந்தப் பாத்திரமாகவே நிற்கிறார். அந்தக் கோபம், வெறி, இயலாமை, வேகம் என்று மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார். முதல் படத்தில் வில்லனாக வந்தாலும் நாயகனை விட அதிகமாகப் பேசப்பட்டவர் அக்ஷய் கண்ணா. இதில் முழுக்க முழுக்க ரண்வீர் தான். அவருக்கு அடுத்துக் கைதட்டல் பெறுபவர் மாதவன். அவர் வரும் காட்சிகள் எல்லாம் பட்டாசு. அமைதியாக அதே சமயம் அழுத்தமாக அந்தப் பாத்திரத்தைச் செய்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவும். பின்னணி இசையும் இணைந்து படத்தை நகர்த்த உதவியிருக்கின்றன. ஹாலிவுட் படங்களுக்கு இணையான மேக்கிங் என்று தாதராளமாகச் சொல்லலாம். சில முக்கியக் காட்சிகளைத் தற்காலப் பரபரப்பான நிகழ்வுகளோடு இணைத்த விதம் ஸ்மார்ட். அந்தக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. முக்கியமாகப் பண மதிப்பிழப்புக் காட்சி.

இவர்கள் இருவரைத் தவிர சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி போன்றோரும் கச்சிதம். இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்கள் மிகச் சுவாரசியம். அதுவும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சபாஷ். கொஞ்சம் பிசகினாலும் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டிய சூழல்.

மைனஸ் என்பதும் இருக்கத்தான் செய்கிறது. ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல இவர் மொத்தக் கும்பலுக்கும் தலைவராகிவிடுகிறார். இவ்வளவு சுலபமாக அது முடியுமா என்பது இயக்குநருக்கே வெளிச்சம். கடைசி சண்டைக் காட்சிகள் வரை வில்லன் பாத்திரம் ஒன்றுமே செய்யவில்லை. மனைவி மகன் என்று இருந்தாலும் நாயகன் குடும்பத்தின் மேல் ஓர் ஈர்ப்பே வரவில்லை. பின் அவர்களுக்கு ஓர் ஆபத்து வரும் போது எப்படிப் பாவப்பட முடியும். வில்லனின் அப்பா என்று ஒரு பாத்திரம் வருகிறது. அதன் தேவை என்ன என்பதும் தெரியவில்லை. இதையெல்லாம் சரி செய்திருந்தால் இன்னும் அரை மணி நேரம் குறைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: பெண்ணும் பொரட்டும் (2026) - காமெடி டிராமா!
Dhurandhar The Revenge

எப்படியிருந்தால் என்ன. தமிழ்ப் படங்களுக்கு இணையான அட்வான்ஸ் புக்கிங். பிரிவியூ காட்சிகளே ஹவுஸ் புல். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு. இவை அனைத்தும் இருப்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் கல்லா காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகளுக்காக இந்தப் படம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமே. அவர்களே முகம் சுளிக்கும் காட்சிகள் கூட இருக்கிறது படத்தில்.

ஒரே ஒரு காட்சியில் யாமி கவுதம் வருகிறார். இயக்குநர் மனைவியாக இருந்து கொண்டு அது கூடச் செய்யவில்லையென்றால் எப்படி. இந்தப் படம் கண்டிப்பாக ஒரு துரந்தர் யுனிவெர்ஸ் என்று மாறக் கூடிய சாத்தியமும் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு முக்கியக் கதாபாத்திரம் வெடி வைத்துக் கொல்லப்படும் காட்சி. தான் புகைத்த சிகரெட் துண்டையும், ஆஷ்ட்ரே போன்றவற்றை மாதவன் சுத்தப்படுத்தி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் காட்சி. முதல் பாகத்தில் தன்னை நக்கலடித்த தீவிர வாதியின் வாயாலேயே பாரத் மாதா கி ஜே என்று சொல்ல வைக்கும் காட்சி. ஒரு திரைக்கதை எப்படி எழுதப்படலாம் என்பதற்கு இந்த மூன்று காட்சிகளே உதாரணம்.

logo
Kalki Online
kalkionline.com