
நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார். மாடலிங் மூலம் தனது பயணத்தை தொடங்கிய சாக்ஷி அகர்வால், பின்னர் வெள்ளித்திரையில் கால்பதித்து தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 2019-ல் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை சாக்ஷி அகர்வால் கடந்த ஜனவரி மாதம் தான் தனது சிறு வயது நண்பரான நரனீத் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவர் இரு தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தான் ஆர்டர் செய்த சைவ உணவில் சிக்கன் கிடந்ததாக தெரிவித்து, இதற்கு காரணமான ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் வாழ்நாளில் அசைவமே சாப்பிடாத சாக்ஷி அகர்வால் இதுகுறித்து மனம் நொந்து வீடியோ வெளியிட்டார்.
அதில் ‘மதம் சார்ந்த விஷயங்களில் நம்பிக்கை கொண்டவள் நான். இந்த சம்பவத்தால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். மதரீதியான விஷயங்களில் கைவைப்பது தவறு' என அவர் கொந்தளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக அதற்கு அவரின் பதிவுக்கு சிலர் ஆதரவும், பலர் அவருக்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ‘உணவு மாறி வந்த விவகாரத்தில் மதத்தை எதற்கு இழுக்கிறார்' என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தன்மேல் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
‘நான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, சைவம்-அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்சினையோ, இந்துக்கள்-இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்சினையோ இல்லை. வாடிக்கையாளருக்கும், மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்சினை. உணவு ஒருவரின் தனியுரிமை. அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சாக்ஷி அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.