
பிக்பாஸ் நடிகை சௌந்தர்யா ஃபெட்எக்ஸ் (FedEx) கொரியர் நிறுவனத்தின் பெயரால் நடத்தப்பட்ட அதிநவீன சைபர் மோசடியில் சிக்கி ரூ.17.5 லட்சம் பணத்தை இழந்ததோடு, ஒரு வருடம் ஆகியும் இன்னும் பணத்தை மீட்க முடியவில்லை என்று விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீக காலமாக, சாதாரண மக்களை அச்சுறுத்தி வந்த சைபர் கிரைம் மோசடிகள், தற்போது பிரபலங்களையும் குறிவைக்க ஆரம்பித்துள்ளன. ஏனெனில் பிரபலங்கள் இதுபோன்ற சம்பவம் வெளியில் தெரிந்தால் அவர்களுக்கு அசிங்கம் என நினைத்து மறைப்பார்கள் என்பதால் அவர்களை குறிவைத்து தற்போது சைபர் கிரைம் மோசடிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
சைபர் கிரைம் மோசடியால் பாதிக்கப்பட்ட நடிகை சௌந்தர்யா இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8-வது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா. கியூட் ரியாக்ஷன்கள், விமர்சனங்களை எதிர்கொண்ட விதம், நேர்த்தியான ஆடைத்தேர்வு என பல விஷயங்களால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவ இவர் இந்த போட்டியில் 2-வது இடத்தை பிடித்தார். இவர் தன்னுடைய குரலுக்காக நான் பல இடங்களில் அவமானங்களை சந்தித்திருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேதனையுடன் பேசி இருக்கிறார். தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இவரிடம் கடந்தாண்டு மோசடி கும்பல் ஒன்று மிரட்டி பணத்தை பறித்துள்ளது. அதாவது, இவரிடம் பெட்எக்ஸ் (FedEx) கொரியர் பெயரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டதாகக் கூறி அவரை மிரட்டியுள்ளதுடன், போலி ஆவணங்களை அவரது தொலைப்பேசிக்கு அனுப்பி டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளனர்.
பின்னர் காணொலி அழைப்பு மூலம் மிரட்டி, வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக சௌந்தர்யா உடனடியாக போலீசிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் பணத்தை மீட்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகை சௌந்தர்யா இந்தச் சம்பவத்தை விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அழைப்புகளை எடுத்தாலோ? அல்லது தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்தாலோ? அதை கிளிக் செய்ய வேண்டாம், அது ஆபத்தானது என்று அந்த வீடியோவில் வலியுறுத்தி உள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலான நிலையில் பலரும் அவருக்கு ஆறுதலையும், அவரது விழிப்புணர்விற்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உங்களுக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தேசிய சைபர் க்ரைம் போர்ட்டலில் புகார் அளிப்பதே சரியான நடவடிக்கை என்கின்றனர் சைபர் வல்லுநர்கள்.