
மலையாள சினிமாவில் மைல்கல்லாக அமைந்த படம் 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’. இந்தப் படத்தின் மூலமாக நடிகர் பிருத்விராஜ், இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தில் மோகன்லால் கதையின் நாயகனாகனவும், அவரோடு விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். அதோடு படத்தின் இயக்குனர் பிருத்விராஜூம் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கொரோனா தாக்கம் ஆரம்பமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம், அரசியல் திரில்லர் கதையாக அனைவரையும் கவர்ந்திருந்தது.
ரூ.30 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 4 நாட்களில் ரூ.50 கோடியையும், 8 நாட்களில் ரூ.100 கோடியையும் எட்டி சாதனை படைத்தது. தியேட்டர் வசூல், சாட்டிலைட் உரிமை போன்ற அனைத்து வழிகளிலும் ரூ.200 கோடியை வசூலைக் கடந்திருந்தது. மலையாளத்தில் ரூ.200 கோடியைக் கடந்த முதல் திரைப்படம் என்ற மைல்கல்லை ‘லூசிபர்’ பதிவு செய்தது.
‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எல் 2 எம்புரான்' படத்தை ரூ.140 கோடியில் தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், இடையில் லைகா புரொடக்ஷனுடன் கைகோர்த்து ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார்.
‘எல் 2 எம்புரான்' படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அதோடு மஞ்சுவாரியர், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யூ சிங், சுராஜ் வெஞ்சாரமூடு, கிஷோர், இயக்குனர் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கேம் ஆப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை என்பதும், மோகன்லால் சினிமா பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது என்பதும் இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பு. இந்த படம் மலையாளம் தவிர தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இன்று ( 27-ந் தேதி) உலகளவில் ஐமேக்ஸ் திரையில் வெளியாக உள்ளது. இந்த படம் தான் மலையாள சினிமாவில் முதல் முறையாக ஐமேக்ஸ் திரையில் வெளியாக படமாகும்.
இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த 20-ந் தேதி வெளியான நிலையில் (மூன்று நிமிடம் 51 நொடிகள்) படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் படக்குழுவை பாராட்டியிருந்தார்.
இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே 97 ஆயிரத்து 865 டிக்கெட்டுகளும், முதல் நாளில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவாகி, 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக எம்புரான் சாதனை படைத்துள்ளது. அத்துடன் டிக்கெட் முன்பதிவிலேயே உலகளவில் ரூ. 58கோடி வரை ‘எல் 2 எம்புரான்' வசூலித்துவிட்டதாக நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் கூறியுள்ளார்.
‘லூசிபர்’ வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பின் அதன் இரண்டாம் பாகமான ‘எல் 2 எம்புரான்' இன்று வெளியாகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் மூன்றாம் பாகமும் அடுத்த சில வருடங்களில் திரைக்கு வரும் என்று இயக்குனர் பிருத்விராஜூம், கதை ஆசிரியரான முரளி கோபியும் கூறியுள்ளனர்.
மலையாள சினிமாவில் அதிகப் பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.