தமிழ் சினிமாவில் இரத்தம் சொட்டும் வன்முறையுடன் , கடத்தல் கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய இவர் முதல் படத்திலேயே தனது முத்திரையைப் பதித்தவர். அடுத்ததாக நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜயை வைத்து மாஸ்டர் , லியோ என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக 500 கோடி வசூலை குவித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.
விக்ரம் திரைப்படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜின் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகள் மூலம் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக உயர்ந்துள்ளார். இவரது திரைப்படங்கள் சில முந்தைய திரைப்படத்தின் கருவுடன் அல்லது சில கேரக்டர்களுடன் தொடர்பு இருக்குமாறு உருவாக்கியுள்ளார். ரசிகர்கள் இதை லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் (LCU) என்று அழைக்கின்றனர். தனது கதைகள் மூலம் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை லோகேஷ் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக இருந்து நடிகராக மாறுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் 'டிசி ' என்ற காதல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் அருண் மாதேஸ்வரன் , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம் என்ற திரைப்படத்தையும் , தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப் படத்தையும் இயக்கி இருந்தார். இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது லோகேஷ் கனகராஜை வைத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லரை இயக்கி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியது. முகம் முழுவதும் இரத்தம் வடிய அந்த போஸ்டரில் லோகேஷ் தோன்றியிருந்தார். இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வாமிகா கபி நடிக்கிறார். இது தான் தமிழில் வாமிகா கபி அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்றாலும் , அதற்கு முன்னரே தமிழ் நாட்டில் நன்கு பிரபலமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த திரைப்படத்தை பரபரப்பாக்கும் ஒரு செய்தி லோகேஷ் கனகராஜ் பெற்ற சம்பளம் பற்றித் தான். இந்த திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் ஆகும் அவருக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு முன்னர் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தை இயக்கியதற்காக அவருக்கு ₹50 கோடி சம்பளம் தரப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
தற்போது நடிகராக முதல்முறையாக அறிமுகம் அவருக்கு இவ்வளவு அதிக சம்பளம் என்பது மலைக்க வைக்கிறது. ஒரு அறிமுக நடிகருக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் கூட இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தது கிடையாது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பல வருடங்கள் கழித்து வாங்கிய இந்த சம்பளத்தை முதல் படத்திலேயே ஒருவர் பெறுவது ஆச்சரியப் படுத்துகிறது. அதே வேளையில் இந்த சம்பளம் தொடர்பாக ஆதாரப் பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.