சின்னக் கவுண்டர் - இயக்குனர் ஆர். வி. உதயகுமாரின் பெஸ்ட்!

Chinna Gounder
Chinna Gounder
Published on

நடிகர், பாடலாசிரியர், உதவி இயக்குனர் என்று திரைத்துறையின் நுணுக்கங்களைக் கற்று, இயக்குனராக உயரத்தைத் தொட்ட இவர், இன்றைக்கு விருதுக்கான திரைப்படங்களைத் தேர்வு செய்யும் ஜூரியாகவும் செயல்படுவது, இவரின் திறமைக்குச் சான்று!

1990 களில் இவர் படங்கள் தமிழகத் திரைவானில் டாலடித்தன! பல படங்கள்  வெற்றிப் படங்களாகவும் அமைந்தன! வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, டமால், டுமீல் இல்லாமல், சதக் குபுக் இன்றி், கிராமீய நிகழ்வுகளைக் கதைக் களமாகக்கொண்டு வெளிவந்த சின்னக் கவுண்டர் போன்ற படங்கள் என்றென்றைக்கும் நினைவை நிறைப்பவை; இனிமையை உணர்த்துபவை!

ஒவ்வொரு பட்டிக்கும்… அது கூட வேண்டாம்… எட்டுப் பட்டிக்கு ஒரு கிராமப் பஞ்சாயத்து, இந்தப் படத்தில் (சின்னக் கவுண்டர்) வருவது போல இருந்திருந்தால், நமது நீதி மன்றங்களில் கோடிக் கணக்கான வழக்குகள் இப்படித் தேங்கியிருக்க மாட்டா!

என்ன? தமிழ் நாட்டிலுள்ள சுமார் 12,525 கிராமங்களுக்கு,1566 (12525/8) சின்னக் கவுண்டர் பட பஞ்சாயத்துக்கள் தேவைப்பட்டிருக்கும்!

சின்னக் கவுண்டர் பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்கிறாரென்றால், எட்டுப்பட்டி மக்களும் நம்பிக்கையுடன் கூடுவதும், அவர்கள் நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவர் நியாயமான தீர்ப்பு வழங்குவதும் படத்திற்குச் சிறப்பு சேர்க்கும் காட்சிகள்!

போலிப் பத்திரத்தைச் சரியாகக் கண்டு பிடித்து, கோயில் நிலத்தை மீட்பதாகட்டும், குஸ்தி வாத்தியாரைப் பள்ளிக்கூட வாத்தியாராக மக்கள் எண்ணியிருக்க, உண்மையை உடைப்பதிலாகட்டும், எளிதாகவே ஸ்கோர் பண்ணி விடுவார் சின்னக் கவுண்டர் விஜயகாந்த்!

வழியில் போகும் வக்கீலே அவர் தீர்ப்புக்காகக் காரில் காத்து நிற்பதும், ’இந்தப்  பையனால் எப்படி இப்படித் தீர்ப்பு வழங்க முடிகிறது' என்று ஆச்சரியப்பட்டு, தன் டிரைவரிடம் வியப்பை வெளிப்படுத்த, டிரைவரோ ‘கோர்ட்டுக்கு வந்திருந்தா ஒரு 10-15 வருஷம் இழுத்தடிச்சிருப்பீங்கல்ல!’ என்று ஒரு சின்னக் குட்டு வைப்பதும் டாப்!

இதையும் படியுங்கள்:
ஓடிடி தளத்தில் பட்டையை கிளப்பும் ரகு தாத்தா… இதை எதிர்பார்க்கவே இல்லையே!
Chinna Gounder

(இயக்குனரின் சொந்த மாமாவே, சின்னக் கவுண்டர் போன்று பஞ்சாயத்துத்  தலைவராக இருந்தாராம் என்பது கூடுதல் தகவல்!)

புதுக் கோட்டை, தஞ்சை மவட்டங்களில் வழக்கத்திலிருக்கும் மொய் விருந்தைப்  படத்தில் வைத்து, சாப்பிட்ட இலையின் அடியில் பணத்திற்குப் பதில் தாலியை வைத்து, கதாநாயகி சுகன்யாவை மட்டுமின்றி நம்மையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துவார் விஜயகாந்த்!

சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டும் காமெடி! காமெடி நடிகர்களே குணச்சித்திர  நடிகர்களாகவும் மாறிக் கதாநாயகனின் பக்கம் நிற்பது! துணி துவைக்கும் கவுண்டமணி, ஊரே விஜயகாந்த் மீது குற்றம் கூற, அப்படிப்பட்ட மக்களின் துணியைத் துவைக்க மாட்டேன் என்று உறுதியேற்பது என்று, நெகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது!

‘கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே’, ’அந்த வானத்தைப் போல!’ ‘முத்து மணி மால’ போன்ற பாடல்கள் என்றைக்கும் ரீங்காரமிடுபவை!

தொப்புளில் பம்பரப் புதுமையும் உண்டு!

‘வேலையை அங்கே செய்! விசுவாசத்தை எங்கிட்ட காட்டு’ என்ற வில்லத் தனத்திற்கும் குறைவற்ற இப்படத்தில், ’எனக்கு ஏதாவது தண்டனை கொடுத்துட்டுப் போங்கய்யா!’ என்று வில்லனே கேட்டுப் புலம்புவதாக முடித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது!

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: தேவரா - லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் நகரும் விதம் 'சபாஷ்'!
Chinna Gounder

திரைத்துறையினரே! சினிமா ஒரு சிறந்த மீடியா! மக்களுக்கு நல்வழி காட்டும் விதமாகப் படங்களை எடுங்கள்! சுட்டு வீழ்த்துவதையும், வெட்டிக் குத்தி வதை செய்வதையும், பழிக்குப் பழி வாங்குவதையும், சட்டங்களைக் கதாநாயகர்களே கையில் எடுத்துக் கொள்வதையும் போன்ற படங்களை எடுத்து, சமுதாயத்தைச் சீரழிக்காதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com