இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
துரோகி படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கடைசியாக சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழில் இப்படம் சூப்பர் ஹிட்டாகி 5 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இப்படி பல இயக்குனர்களுக்கு மத்தியில் சூப்பர் ஹிட் இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா. இவரின் கதைக்கெனவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டியில் சாவர்க்கர் ஒரு மதிப்பு மிகுந்த மனிதர் என்றும் அவர் தனது மனைவியை படிக்க வைத்தார் என்றும் பெருமையாக பேசி இருந்தார். அவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுதா கொங்கரா ஒரு தவறான தகவலை பதிவு செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் கண்டனங்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் தான் அளித்த பேட்டியில் தவறான கருத்து கூறியதாக சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த போது சுதா கொங்கரா அதற்காக மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.