Director Vasantha Balan interview
Director Vasantha Balan interview

“உழைப்பாளிகளின் வலி... எளியோரின் கோபம்.... நெருங்கிப் பார்த்தால், சாக்லேட்கூட கசக்கும்!” - வசந்த பாலன்!

‘வெயில்’, ‘அங்காடித் தெரு’  போன்ற வாழ்வியல் பின்னணி கொண்ட படங்களைத் தந்தவர் இயக்குநர்  வசந்தபாலன். நீண்ட இடைவெளிக்குப்பின்பு தற்போது  மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத்  தந்துள்ளார். இந்த வெற்றி வெள்ளித்  திரையில் அல்ல ஒடிடி தளத்தில்.

வசந்த பாலன் இயக்கத்தில் ஜீ 5 ஒரிஜினல் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள ‘தலைமைச் செயலகம்’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  அரசியல் பின்புலம் கொண்ட இந்தத் தொடரைப் பார்க்கும்போது பல்வேறு அரசியல் தலைவர்கள் நம் நினைவுக்கு வருகிறார்கள். வாழ்த்துக்களுடன் சில கேள்விகளை  நமது கல்கி ஆன் லைன் சார்பாக முன்வைத்தோம். கல்கி ஆன் லைன் இதழுக்கு வசந்த பாலன் அவர்கள் அளித்த நேர்காணல் இங்கே… 

Q

‘அங்காடித் தெரு’, ‘வெயில்’ படங்களில் எளிய மக்களின் வலிகளைச் சொன்னீர்கள். ஏன் இப்படி ஒரு பொலிடிகல் த்ரில்லர் கதையில் இறங்கிவிட்டீர்கள். இனி வணிகம்தான் எடுபடும் என்பதால்தானா?

A

‘அங்காடித் தெரு’, ‘வெயில்’ படங்களில் எளிய மக்களின் வலியைச் சொல்லியிருந்தேன். இதே எளிய மக்கள் கோபம் எப்படி இருக்கும் எனச் சொல்ல நினைத்த களம்தான் ‘தலைமைச் செயலகம்’. தஞ்சாவூர் பகுதியில் கூலி உயர்வு கேட்டு போராடி, அதனால் பாதிக்கப்படும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு பெண்ணின் கோபம் எப்படி இருக்கும் எனச் சொல்ல வந்ததுதான் இந்த ‘தலைமைச் செயலகம்’.

Q

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே என்று சொன்னீர்கள். ஆனால், தொடரைப் பார்த்தால் வாழ்ந்த, மறைந்த தலைவர்கள் பலர் நினைவுக்கு வருகிறார்கள். இது தற்செயலானது என்று சொல்லித் தப்பிக்காதீர்கள். உண்மையைச்சொல்லுங்கள்…

A

நான் உண்மையைச் சொல்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம், பி டி .பழனிவேல் தியாகராஜன் இவர்களைப் போன்று படித்த அரசியல் தலைவர்கள் முதல்வர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி யோசிப்பேன். இந்த யோசிப்பின் அடிப்படையில் உருவானதுதான் ‘தலைமைச்செயலக’த்தின் முதல்வர் கிஷோர் கதாபாத்திரம் . இந்த வெப் தொடரைப் பார்க்கும்போதும், இதில் வரும் அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போதும், இவர் அவரா? இல்லை இவரா? என்பது போன்ற கேள்விகள் பார்வையாளர்களின் நினைவுகளில் வந்துபோகும். ஆனால், யாரென்று உறுதியாக கூறமுடியாது. இந்த மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். இது நடந்துவிட்டது.

Director Vasantha Balan
Director Vasantha Balan
Q

இந்தக் கதையை ராடான் நிறுவனத்தில் சொல்லும்போது ராதிகா சரத்குமார் அவர்களின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?

A

முதல்வரை பின்னணியாக கொண்ட ஒரு கதையை ராடான் அவர்களும் சொன்னார்கள். அதை அப்படியே எடுக்காமல் ஒன் லைனை மட்டும் எடுத்துக்கொண்டு நிறையவே மாற்றி ‘தலைமைச்செயலக’த்தை உருவாக்கினேன்.

Q

முதல்வராக நடிக்க தமிழ்நாட்டில் நடிகர்களே இல்லையா… ஏன் கன்னடத்திலிருந்து கிஷோரை அழைத்து வந்தீர்கள்?

A

சத்யராஜ் , பிரகாஷ் ராஜ், சரத்குமார் போன்ற நடிகர்களை முதலில் அணுகினோம். இவர்களின் சம்பளமும், தேதியும் சரியாக அமையாததால் கிஷோர் இந்தக் கதைக்குள் வந்தார். தொடர் முழுவதும் ட்ராவல் ஆகும் கேரக்டர் என புரிந்து நடித்து தந்தார். மிக எளிமையான மனிதர், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும்போதுகூட ஆட்டோவில் வருவார். மேனேஜர் வைத்துக்கொள்ளாமல் நேரடியாக பேசுவார். தென்னிந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் கிஷோர்.

Q

‘வெயிலி’ல் அழுக்காக காட்டிய ஸ்ரேயா ரெட்டியை ‘தலைமை செயலக’த்தில் முதல்வரின் அட்வைஸராக காட்டி உள்ளீர்களே? எப்படி நடந்தது இந்த ட்ரான்ஸ்பர்மேஷன்?

A

உழைக்கும் ஏழை எளிய மக்களை இப்படி அழுக்கானவர்கள் என்று சொல்வதைக் கண்டிக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல பலர் என்னிடம் ‘வெயில்’ படத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை அழுக்கான கதாபாத்திரம் என்று முன்வைக்கிறார்கள். இவர்கள் அழுக்கானவர்கள் அல்ல. சுத்தமாக இருக்கிறார்கள். தூய்மையான ஆடையை அணிகிறார்கள். சரியாக உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய திராவிட முகமாக ஸ்ரேயா ரெட்டி இருக்கிறார். ‘தலைமை செயலக’த்தின் கதையைச் சொல்வதற்கு ஸ்ரேயாவிடம் சென்றிருந்தேன். சேலையில் அமர்ந்திருந்தார். பார்த்த உடனே என் கொற்றவை கேரக்டருக்கு ஸ்ரேயாவைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்துவிட்டேன்.

Q

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கர் கொள்கைதான் என் அரசியல் என்று தொடரின் ஓரிடத்தில் சொல்கிறார் ஸ்ரேயா ரெட்டி . நீங்கள் இடது சாரி சிந்தனைவாதியா?

A

நான் சிறு வயதில் விருதுநகரில் இருந்தபோது என் வீட்டின் எதிர் வீட்டில் இருந்த ஒருவர் காரல் மார்க்ஸ், லெனின், ஜீவானந்தம் போன்றவர்களின் சிந்தனையை அறிமுகம் செய்தார். நாம் அமர்ந்திருக்கும் இந்த நாற்காலி, இந்த கட்டடம் என உலகில் உள்ள அனைத்துமே உழைப்பால் ஆனது. இந்த உழைப்பாளர்களுக்கான தத்துவம்தான் கம்யூனிசம். நான் கம்யூனிஸ்ட் அரசியலில் இல்லை. ஆனால், இந்தத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவன . மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகள் என்பது நம் நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கே தேவையானது.

Director Vasantha Balan
Director Vasantha Balan
Q

வட இந்தியாவை விட தமிழ்நாடு பல மடங்கு சிறப்பானது என்று சில நாட்கள் முன்பு சொல்லியிருந்தீர்கள். எந்த அடிப்படையில் சொன்னீர்கள்?

A

போய் பார்த்தபோதுதான் தெரிந்துகொண்டேன். ‘தலைமைச் செயலகம்’ படப்பிடிப்பின் போது ஜார்கண்ட் உட்பட பல்வேறு வட மாநிலங்களுக்குச் சென்றேன். அங்கே இன்னும் நம் தமிழ்நாட்டைப்போல சாலை வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லை. பெண் கல்வி பரவலாக இல்லை. இப்போதுதான் மதிய உணவு திட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நாம் இங்கே மதிய உணவு திட்டத்தைத் தாண்டி இலவச உயர் கல்வி வரை சென்று விட்டோம். இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதையும் படியுங்கள்:
காலம் தாண்டியும் மனதில் நிற்கும் மதுரை மண்ணின் 6 திரையரங்குகள்!
Director Vasantha Balan interview
Q

உங்கள் படத்தின் கதை மாந்தர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

A

என் முதல் படம் ‘ஆல்பம்’ பெரிய வெற்றி பெறவில்லை . நீண்ட இடைவெளிக்குப் பின்பு விருதுநகரில் உள்ள என் வீட்டிற்குச் சென்றிருந்தேன். வீட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களில் என் தம்பி ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தார். நான் சற்று ஒதுங்கியே இருந்தேன். இன்னும் ஒரு வெற்றியைத் தரவில்லை என்று என்னுள் எழுந்த எண்ணம்தான் காரணம். இதை யாரும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்போதே அண்ணன் - தம்பியை வைத்து ‘வெயில்’ கதை மனதில் உருவாகிவிட்டது. தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். அப்போதே ‘அங்காடித் தெரு’ உருவாகிவிட்டது .

5 ஸ்டார் சாக்லேட் என்பது என் சிறு வயதில் பெரிய விஷயமாகப் பார்த்தேன். சுவையாக இருக்கும் சாக்லேட் எனக்கு கசப்பாகத் தெரிந்தது. இதிலிருந்தது உருவானதுதான் அநீதி. என்னைச் சுற்றி இருக்கும் மாந்தர்களை வைத்துத்தான் கதையை உருவாக்குகிறேன்.

Q

உங்கள் அடுத்த படம் வலியா? கோபமா?

A

கண்டிப்பாக எளிய மனிதர்களின் கோபம்தான் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com