தமிழர்களின் வாழ்க்கையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பிரிக்கமுடியாத அம்சமாக இருக்கும் சினிமாவை பற்றிப் பேசும்போதெல்லாம் இந்தத் திரைப்படங்கள் திரையிடப்படத் திரையரங்கங்களை ரசிகர்களால் மறக்கமுடியாது. சண்டை, காதல், குடும்பம், சோகம் என பல உணர்வுகளைத் திரையில் காட்டிய இந்தத் திரையரங்கங்கள் இன்று இடிக்கப்பட்டு மால்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன என்பது நம் நெஞ்சினை உருக்கி எடுக்கும் உண்மை!
தமிழ்நாட்டில் சினிமாவாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் மதுரை நகரம் தனது முத்திரையைப் பதித்திருக்கிறது. இன்றும் கூட ஒரு படத்தின் உண்மையான ரீச்சை தெரிந்துகொள்ள மதுரையில் படம் எப்படி வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை முக்கியமாகக் கவனிப்பார்கள் சினிமாக்காரர்கள். மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அரசியலுக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது மதுரையில் நடந்த ஒரு சம்பவம்தான்.
பெரிய ஹீரோ முதல் சிறு ஹீரோ வரை ரசிகர் மன்றங்களைக் கொண்ட நகரம் மதுரை. மாசி, ஆணி, சித்திரை என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அமைந்த வீதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே சினிமா தியேட்டர்கள் எழும்பின. புகழ்பெற்ற, ஆனால் இன்று காணாமல் போன, சில திரையரங்கங்களை இங்கே பார்க்கலாம்.
சிடி சினிமா என்று அழைக்கப்படும் சிட்டி சினிமா மதுரை தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ளது. 1930 ஆண்டு திறக்கப்பட்டது இந்த அரங்கம். தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் இந்த அரங்கில் இரண்டு வருடங்கள் வெற்றிநடை போட்டது. தமிழ்ப் படங்கள் பல இந்தத் தியேட்டரில் வெளியிட்டாலும் இங்கே வெளியிடப்பட்ட ஆங்கிலப் படங்களுக்காகவே இந்த அரங்கம் இன்று வரை மக்களிடையே நினைவு கொள்ளப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட இந்த அரங்கம் இங்கே சுற்றி அமைந்துள்ள ஜவுளி கடையின் குடவுனாக மாறிவிட்டது.
மதுரை சிந்தாமணி திரையரங்கத்தை சிடி சினிமாவின் நீட்சியாகவே கருத வேண்டும். என்.எம் ஆர். சகோதரர்கள் என்று அழைக்கப்படும் சௌராஷ்டிர சகோதரர்கள் நான்கு பேர் ராயல் பிக்ச்சர்ஸ் சார்பாக தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படத்தை 1937ல் மதுரை சிட்டி சினிமா ஹாலில் ரிலீஸ் செய்தார்கள். இந்தப் படம் இரண்டாண்டுகள் மேல் இந்தத் தியேட்டரில் ஓடியது. இந்த வசூலைக்கொண்டு சகோதரர்கள் நால்வரும் சிந்தாமணி என்ற தியேட்டரை மதுரை நகரில் கட்ட முடிவு செய்தார்கள். முடிவு செய்தவுடன் சகோதரர்களில் ஒருவர் லண்டன் சென்று அங்கே கப்பல் போன்ற அமைப்பில் உள்ள ஓடியன் தியேட்டரை பார்வையிட்டார். ஓடியனை போலவே மதுரை சிந்தாமணியை கப்பல் போன்று என்.எம் ஆர் ப்ரதர்ஸ் உருவாக்கினார்கள். 1939ல் திறக்கப்பட்ட இந்தத் தியேட்டர் தியாகராஜ பாகவதர் படங்கள் முதல் தனுஷ் காலம் வரை 75 ஆண்டுகள் வெற்றிகரமாக நடை போட்டது. ‘குமரிப்பெண்’ படம் வெளியானபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் சேர்ந்து வந்து படம் பார்த்து உள்ளார்கள். சிவாஜி அவர்களின் 200வது படமான ‘திரிசூலம்’ படத்தை சிவாஜி அவர்கள் தனது மனைவியார் கமலா அவர்களுடன் சேர்ந்து இந்த சிந்தாமணியில் பார்த்து மகிழ்ந்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் 100வது நாள் விழாவின்போது ஜெமினி அவர்களுடன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் அவர்களும் வந்திருந்தார். இந்தத் தகவல்கள் எல்லாம் இந்தப் பகுதியில் வசிக்கும் வயதான பெரியவர்களால் மறக்க முடியாத நினைவுகளாக பேசப்பட்டு வருகிறது. இந்தச் சிந்தாமணியை இடிக்கும்போது வேலை செய்தவர்கள் பலர் இந்த அரங்கில் படம் பார்த்தவர்கள். இவர்கள் கண்ணீர் சிந்தியபடியே இந்த தியேட்டரை இடித்தார்கள் . சிந்தாமணி கப்பல் தரை தட்டிவிட்டது என்றார்கள்.
1952ல் திறக்கப்பட்ட தங்கம் தியேட்டர் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சினிமா ஹால் என்ற பெயர் பெற்றது . சுமார் 2600 பேர் வரை ஒரே நேரத்தில் படம் பார்க்கும் அளவுக்குப் பெரிய தியேட்டர் இது. இந்த அரங்கில் முதலில் ரிலீசான படம் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ . 110 நாட்கள் வரை இப்படம் இங்கே ஓடியது. மதுரை தங்கத்தில் 25 நாட்கள் ஓடினாலே 100 நாட்களுக்கு இணையாக பார்க்கப்படும். 100 நாட்கள் ஓடினால் ஒரு வருடம் ஓடியதாக பார்க்கப்படும். அன்றைய சினிமா தயாரிப்பாளர்கள் தங்கம் தியேட்டரில் தங்களது படங்கள் ஓடும் நாட்களை உன்னிப்பாகப் பார்ப்பார்கள். ஒரு காட்சி முடிந்து வெளியே வந்தால் மதுரை சித்திரை திருவிழாவில் வரும் கூட்டத்தைபோல மக்கள் வெளியே வருவார்கள் . மதுரை மட்டுமில்லாமல் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் இந்தத் தங்கம் 1992ஆம் ஆண்டு தனது இயக்கத்தை நிறுத்தியது.
மதுரையில் பழமையான தியேட்டரிகளில் இதுவும் ஒன்று. இன்று இருக்கும் பல மினி தியேட்டர்களுக்கு இம்பிரியல் ஒரு முன்னோடி. ஒரு பெரிய வீடு போன்ற அளவில்தான் இந்தத் தியேட்டர் இருக்கும். பெரும்பாலும் பழைய படங்களையே இங்கே திரையிடுவார்கள். மூட்டை பூச்சி கடிகளுக்குப் பஞ்சம் இருக்காது . கீழே உட்கார்ந்து படம் பார்ப்பவர்களுக்கு சில சமயம் பால்கனியிலிருந்து சிறுநீர் அபிஷேகம் நடந்துவிடும். 1980களிலேயே இந்த அரங்கம் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட்டுவிட்டது.
1940களில் நீதிக்கட்சியில் அங்கம் வகித்த PT .ராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தியேட்டர் மதுரை தேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் தரும் அரங்கமாக தேவி இருந்தது. ரஜினியின் ‘பாட்ஷா’ இங்கே பெரிய அளவில் வெற்றி பெற்றது . பார்த்திபன் நடித்த ‘ஹவுஸ் புல்’ திரைப்படம் இங்கே படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தேவி தியேட்டர் குண்டு வெடிப்பில் இடிந்துபோவது போல் காட்டி இருப்பார்கள். இந்தக் காட்சியை இங்கே படமாக்கி இருக்கக்கூடாது. அதனால்தான் தேவி தியேட்டர் மூடும்படி ஆகிவிட்டது என்று சென்டிமெண்டாக சொல்லும் மதுரைவாசிகளும் இருக்கிறார்கள். இந்தத் தேவி அரங்கம் இருந்த இடம் இப்போது அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிவிட்டது .
மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு மிக அருகில் இருக்கும் இந்த சென்ட்ரல் பல பெரிய ஹீரோ படங்களுக்கு அடையாளமாக இருந்தது. மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு நேராக இந்தத் தியேட்டரில் ஓடும் படங்களைத் தரிசிக்க வரும் வெளியூர் ரசிகர்கள் பலர் இருந்தனர். மதுரை மண்ணின் மைந்தர் விஜயகாந்திற்கு மிகப் பிடித்தமான தியேட்டர் இது . 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த சென்ட்ரல் கடந்த பத்தாண்டுகளாக பழைய எம்.ஜி .ஆர்.,சிவாஜி படங்களை ரீ ரிலீஸ் செய்து சமாளித்து வந்தது. கடந்த சில நாட்களாக படங்கள் திரையிடப்படுவதில்லை.
மேற்கூறிய தியேட்டர்கள் மட்டுமில்லாமல் நியூ சினிமா, நாட்டியா, அபிராமி போன்ற பல திரை அரங்கங்கள் மூடப்பட்டுவிட்டன. TM. சௌந்தர்ராஜன், TR மகாலிங்கம் , விஜயகாந்த், விவேக் , ராம்கி , வடிவேலு போன்ற பல கலைஞர்களை மதுரை மண் தமிழ் சினிமாவிற்குத் தந்துள்ளது. இவர்களை போலவே மதுரை மாநகரத் திரையரங்கங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.