கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த இயக்குனர் வெங்கட் பிரபு அது தொடர்பான போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலில் தாவிய நடிகர் விஜய் தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. இந்த படத்தை தொடர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகும், அதன் பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதுமாக விஜய் அறிவித்துள்ளார்.
இதனால் விஜய்யின் ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், கோட் பட ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகின்றனர். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது. வெங்கட் பிரபு கதை என்றாலே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதிலும் இந்த படத்தில் மைக் மோகன், ஸ்னேகா, லைலா, பிரசாந்த் என 90ஸ் நடிகர்கள் இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சென்னை, ஐதராபாத், கேரளா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு ஒருவழியாக ஷூட்டிங்கை நிறைவு செய்து தற்போது பின்னணி பணிகளில் பிசியாக உள்ளது.
இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி திரைக்கு வர உள்ளது. இதனால் இப்படத்தின் பின்னணி பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள லோலா என்கிற வி.எப்.எக்ஸ் நிறுவனம் தான் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிறுவனம் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி இருக்கிறது.
இந்த நிலையில், கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில், அதற்காக விஜய், வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்காவில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.