
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்த DNA திரைப்படம் கடந்த ஜூன் 20-ல் தியேட்டரில் வெளியானது. தியேட்டர் ரிலீஸூக்கு முன்பே இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால் DNA திரைப்படம் விரைவிலேயே ஓடிடி தளத்திற்கு வந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து இன்று (ஜூலை 19) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் DNA திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி இருக்கிறது. ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான DNA திரைப்படம் அதர்வாவுக்கு கம்பேக் படமாக அமைந்தது.
தியேட்டர் வெளியீட்டின் போது விமர்சன ரீதியாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் வசூல் ரீதியாகவும் ஓரளவு வெற்றியைப் பதிவு செய்தது. இப்படத்தில் வரும் 5 பாடல்களுக்கும் தனித்தனியாக 5 புதிய இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜிப்ரான் பின்னணி இசையை அமைத்திருந்தார்.
தியேட்டரில் ரசிகர்கள் DNA படம் அருமை என கொண்டாடினார்கள். இந்நிலையில் இன்று ஓடிடி தளத்திலும் DNA படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. DNA படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இருப்பினும் படத்தின் நேர்மறையான விமர்சனத்தால், மூன்று நாட்களுக்குப் பிறகு வசூலை ஈட்டத் தொடங்கியது. இதன்படி DNA திரைப்படம், முதல் வாரத்தில் ரூ.4.6 கோடி வசூலை ஈட்டியது.
படம் நன்றாக இருந்தும் வசூல் பெரிய அளவில் இல்லை என தொடக்கத்தில் சொல்லப்பட்டது. இருப்பினும் படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.9.33 கோடி என்று சொல்லப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால், இந்த வசூல் படக்குழுவிற்கு திருப்திகரமான வெற்றியை உணர வைத்தது.
ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் மற்றும் ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்களை அடுத்து DNA படத்தில் உணர்ச்சிகரமான கதையைத் தேர்ந்தெடுத்து அசத்தியிருப்பார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். தனது குழந்தையைத் தேடும் அப்பாவாக நடிகர் அதர்வா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவருக்குப் போட்டியாக நடிகை நிமிஷாவும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக தனது நடிப்பை அரங்கேற்றினார்.
அதர்வாவின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் ஒரு தரமான வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த வெற்றி DNA படத்தின் மூலம் அதர்வாவுக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. இப்படத்தின் டைட்டிள் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இவருடைய தந்தை முரளி நடித்த இதயம் படம் இன்றும் கூட எண்ணற்ற ரசிகர்களின் பிடித்தப் படங்களின் பட்டியலில் இருக்கும். இந்நிலையில் இதயம் முரளி என்ற தலைப்பிற்கே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பராசக்தி திரைப்படத்திலும் அதர்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.