
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலபேர் முயற்சி செய்தனர். ஆனால் அதனைப் படமாக்கிய பெருமை மணிரத்னத்தையே சேரும். தற்போது ஒரு புதிய காதல் திரைப்படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட கதையம்சத்தைக் கையாள்வதில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இவரது படங்கள் அனைத்தும் தனித்துவமான படைப்புகள். உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாக ‘பல்லவி அனுபல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடக்கத்தில் இவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. ஆனால் 1986 இல் மணிரத்னம் இயக்கிய மௌனராகம் மற்றும் நாயகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்து விட்டார் மணிரத்னம்.
இதனைத் தொடர்ந்து ரோஜா, பம்பாய் மற்றும் உயிரே ஆகிய திரைப்படங்கள் தீவிரவாத எதிரிப்பைப் பேசும் படங்களாக வெற்றியடைந்தன. கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 1991 இல் மணிரத்னம் இயக்கிய தளபதி திரைப்படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத் தந்தது. அக்னி நட்சத்திரம், அஞ்சலி, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் மணிரத்னம். இவர் இயக்கிய பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து தக் லைஃப் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் அடுத்ததாக மணிரத்னம் கையாளவிருக்கும் கதையானது, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற காதல் கதை என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் யாருமின்றி, முற்றிலும் புதுமுகங்களை களமிறக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்திற்கு சமகால காதலர்களை ஈர்க்கும் விதமாக கதையை எழுதி இருக்கிறார் மணிரத்னம். இருப்பினும் திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்யப் போகிறாராம். அதோடு இதற்கான முதற்கட்ட வேலைகள் கூட தொடங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுமையான காதல் கதைக்களத்துடன் களமிறங்கும் மணிரத்னம், படப்பிடிப்பு முழுவதையும் ஒரே கட்டமாக எடுக்க முடவெடுத்திருக்கிறார். இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறார்.
காதல் படங்களை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியாக எடுப்பார் மணிரத்னம். 2017 இல் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்திற்கு பிறகு, மணிரத்னம் தற்போது காதல் கதையை கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய பல காதல் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன. அவ்வகையில் இந்த புதிய திரைப்படத்தின் மீதும் இப்போதே எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து விட்டன. படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெறுவதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.