ஒரு சினிமா நடிகராக நமக்கு அமீர்கானை நன்றாகவே தெரியும். ஆனால், அவர் செய்த விசித்திரமான நன்கொடை குறித்து தெரியுமா?
இப்போது ஒருவர் ஏழை மக்களுக்கு 1000 ரூபாய் தருகிறேன் என்று கூறினால், உடனே ஏழை மட்டுமல்ல அனைவருமே வந்து வாங்குவார்கள். அல்லது அரசு செய்வதுபோல, ஆவணங்கள் வாங்கி ஏழை என்பதற்கான தகுதியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து பணம் கொடுப்பார்கள். அதிலும் ஏதாவது உணவு பொருட்களோ அல்லது ஜாமான்களோ கொடுத்தால், அப்போதும் வீட்டில் அனைத்து பொருட்கள் வைத்திருபவனும் வந்து வாங்குவான்.
இந்த உண்மையை நன்கறிந்த அமீர்கான், ஏழை மக்களுக்கு மட்டும் தன்னுடைய நன்கொடை செல்ல வேண்டும், அதேபோல் ஆவணங்கள் போன்ற ஆதாரங்கள் வாங்கி நேரத்தை செலவிடக்கூடாது, அதேபோல் ஏழை மக்கள் ஒருவர்க்கூட விட்டுப்போகக் கூடாது. இவையனைத்தையும் எண்ணிப்பார்த்த அவர் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்.
யோசித்தாரோ இல்லையோ… ஆனால், அதனை செய்தே விட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர் அமீர்கான், மஞ்சப்பைகளில் அரை கிலோ முதல் 1 கிலோ வரையிலான மாவை மக்களுக்கு அளிக்குமாறு கொடுத்திருக்கிறார். அவ்வளவு சிறிதளவு மாவை மிகவும் பின்தங்கி இருக்கும் மக்களே வாங்குவார்கள். மற்றப்படி யாருமே முன்வந்து அதனை வாங்கமாட்டார்கள் அல்லவா?
அப்போது உணவிற்கே தடுமாறும் மக்கள் மட்டுமே அந்த மாவை வாங்கினார்கள். உடனே அதனைவைத்து உணவை சமைக்க மாவைப் பிரித்திருக்கிறார்கள். அப்போதுதான் ஒன்றைப் பார்த்தார்கள். அந்த மாவிற்குள் 15,000ரூபாய் பணம் இருந்தது.
மாவிற்குள் இருந்த அனைத்து பணமும் உரிய ஏழை மக்களுக்கு மட்டுமே சென்றது. நடுவில் யாரும் அந்த பணத்திற்கு கணக்குப்போடவில்லை. அதேபோல், வீட்டில் அனைத்தையும் வைத்துக்கொண்டு வெளியே எதுவும் இல்லாததுபோல் காண்பித்துக்கொள்ளும் யாருக்கும் அந்தப் பணம் செல்லவில்லை.
யாருக்கு பணம் தேவையோ அவர்களுக்கு மட்டுமே சரியாக சென்றது.
இதுதான் இதுவரையில் செய்யப்பட்ட விசித்திரமான மற்றும் நியாயமான நன்கொடையாகும்.