

காந்தாரா படத்தின் அத்தியாயம் 1ல் கிளைமேக்ஸில் ஹீரோவான பெர்மி ஒரு பெரிய அரக்கனுடன் சண்டை போடுவது போல காட்சிகள் இருக்கும். அந்த அரக்கன் யார்? எதற்காக அவன் கைகளில் முடியை வைத்துக் கொண்டிருப்பான். அவன் எதற்காக பெர்மியை தாக்க வேண்டும் என்பதை பற்றிய பல கேள்விகளுக்கு விரிவான பதிலை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்து புராணத்தில் சோமசர்மன் என்ற பிராமணர் இருந்தார். அவர் மிக பெரிய அறிஞர் மற்றும் புத்திசாலி. அவருக்கு கடவுள் பக்தியும் மிகவும் அதிகம். காலப்போக்கில் ஒரு ராஜாவின் மீது இருந்த பொறாமை காரணமாக இவருடைய பக்தியையும், அறிவாளித்தனத்தையும் பயன்படுத்தி அந்த ராஜா மீது ஒரு சாபத்தை கொடுக்கிறார். தனக்கு இருக்கும் அறிவை கெட்ட காரியங்களுக்காக பயன்படுத்தி பிளாக் மேஜிக் செய்ய ஆரம்பிக்கிறார்.
அதர்ம வழியில் செல்ல தொடங்குகிறார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கடவுள் சோமசர்மன் இறந்த பிறகு அவனுக்கு மறுப்பிறவி கொடுக்க முடிவு செய்கிறார் - மனித பிறவியில்லை பிரம்ம ராக்ஷச பிறவி!
பிரம்ம ராக்ஷசனின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் ராஜா சொல்லும் வேலைகளையெல்லாம் இவன் செய்ய வேண்டும். அந்த ஊரை சுற்றியுள்ள தெய்வீகமான இடங்களையும் காவல் காக்க வேண்டும். எந்த ராஜா இவனுக்கு வேலை தருகிறாரோ அவர் பிரம்ம ராக்ஷசனுக்கு தொடர்ந்து வேலைகளை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படி வேலை சொல்வதை நிறுத்தினால் பிரம்ம ராக்ஷசன் அந்த ராஜாவை கொன்று விடுவான்.
ஒருசமயம் பிரம்ம ராக்ஷசனின் ஆன்மாவை கட்டுப்படுத்திய ராஜா ஒருவன் அவனுக்கு வேலைகளை கொடுக்கிறான். பிரம்ம ராக்ஷசன் எல்லா வேலைகளையும் செய்து முடித்ததால் அந்த ராஜாவிடம் இவனுக்கு கொடுக்க வேலைகள் இல்லாமல் போனது. வேலை இல்லாத பிரம்ம ராக்ஷசன் ராஜாவை கொல்வதற்காக கோவமாக வருகிறான்.
அப்போது அவனை தடுத்த ராணி அவன் கையில் ஒரு முடியை கொடுத்து, "இதை நேராக்கி என்னிடம் எடுத்து வா!" என்று கூறி ஒரு வேலையை தருகிறார். ஆனால் எவ்வளவு தான் முடியை நேராக நிமிர்த்த முயற்சித்தாலும் முடியாமல் சுருண்டு விடுகிறது. இதனால் அவன் காலம் முழுக்கவும் அந்த முடியை நேராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் இருக்கும் குகை மிகவும் தெய்வீகமானது என்று படத்திலேயே சொல்லியிருப்பார்கள். அதனால் தான் பிரம்ம ராக்ஷசன் பல வருடங்களாக அந்த இடத்தை காவல் காத்துக் கொண்டிருக்கிறான். பெர்மி உள்ளே வந்ததும் அவனை தாக்க ஆரம்பிக்கிறான்.