தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார். மீடியாக்கள் மற்றும் சினிமா விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் எப்போதும் தனித்து இருப்பதால் அவரது இந்த பேட்டி நாடு முழுக்க வைரல் ஆகி கொண்டிருக்கிறது. தனது சினிமா வாழ்க்கை , கார் ரேசர் ஆசைகள் , காதல் , வலி, வெற்றி மட்டுமல்ல விஜயின் அரசியல் குறித்து, அவர் மனம் திறந்தது நாடு முழுக்க பேசுபொருள் ஆகியுள்ளது. அஜீத் பேச ஆரம்பித்தால் எதையும் வெளிப்படையாக பேசுவார் என்ற கருத்து வலுப்படுகிறது. அவரது பேட்டியில் சில துளிகள்
பெயர் மாற்றம் மற்றும் மொழி தடுமாற்றம்:
சினிமாவிற்கு வந்த புதிதில் பலரும் அவரது பெயர் பரிச்சயமாக இல்லை என்பதால் மாற்ற சொன்னதாகவும் , ஆனாலும் தான் தனது பெயரை மாற்ற விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.ஆரம்ப காலத்தில் அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வந்தாலும் முழுமையாக மொழி பேச தெரியாமல் இருந்துள்ளார். நாளடைவில் கடினமான உழைப்பு காரணமாக , தமிழ் சினிமாவில் பணியாற்றி மொழியை சரளமாக பேசக் கற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கார் ரேஸ் மற்றும் 29 சர்ஜரிகள்:
சரியான அணியை உருவாக்குவதும் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும் தனது சினிமா மற்றும் கார் ரேஸ் வாழ்க்கைக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளார். " வாழ்க்கையில் நிறைய சவால்கள் இருந்தன , நான் எல்லாவற்றிலும் மனப்பூர்வமாக ஈடுபாடு கொண்டிருந்தேன், எல்லாவற்றையும் சமாளித்தேன். கார் ரேஸ் பொறுத்தவரை விளையாட்டை ஒரு தொழிலாக பார்க்கும் 19 வயது இளைஞனைப் போலவே நான் கடினமாக உழைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
நாம் சரியான அணியை ஒன்றாக இணைக்க வேண்டும். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி "நான் பணிபுரியும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.என் சினிமா முயற்சிகளின் ஒரு பகுதியாக காயங்கள் காரணமாக 29 அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள வேண்டியிருந்தது." என்று அஜீத் கூறினார்.
காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை:
"நான் வாழ்வதற்கு எளிதான நபர் இல்லை , ஷாலினி என்னுடன் கடினமான காலங்களை கடந்து வந்திருக்கிறார். எப்போதும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். குழந்தைகள் வரும் வரை, கார் பந்தயங்களுக்கு செல்லும் போது என்னுடன் பயணம் செய்துள்ளார். அவருடைய ஆதரவு இல்லாமல் இவை எதுவும் எனக்கு சாத்தியமில்லை." எனது வெற்றிக்கு மனைவி தான் காரணம் என்று அஜித் கூறினார்.
நிறைய வெற்றிகள் இருந்தாலும் , என் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை , பெயரும் புகழும் என்னை நிறைய தியாகம் செய்ய வைக்கிறது. “நான் பெரும்பாலான நேரங்களில் என் வீட்டிலேயே இருக்கிறேன் , என் ரசிகர்கள் கொடுக்கும் அன்புக்கும் நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் அதே அன்பினால், என் குடும்பத்தினருடன் வெளியே இருக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. என் மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை, மிகவும் பணிவாக என்னை வெளியேறச் சொன்ன நேரங்கள் உள்ளன. புகழ் உங்களுக்கு நிறைய கொடுத்தாலும் அது உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறது, ”என்று அஜித் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் பற்றி :
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது , இதற்கு நாம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது , கூட்டத்தை காட்டுவது தான் பெருமை என்ற அதீத மனநிலையில் உள்ள சமூகமாக நாம் இருக்கிறோம். இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை காண ஏராளமான மக்கள் பங்கேற்கும் போது இது போன்ற பிரச்சனைகள் வந்ததில்லை . ஆனால் , திரைப்படங்கள் மற்றும் சினிமா நடிகர்களை பார்க்க செல்லும் போது இப்படி நடக்கிறது. இது திரைத் துறையின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
பிடித்த ஹீரோக்களின் படங்களின் முதல் நாள் முதல் ஷோவில் ரசிகர்கள் அதை செய்தார்கள், இதை செய்தார்கள் என அனைத்து மீடியாக்களும் போட்டி போட்டுக்கொண்டு மிகைப்படுத்தி பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றி இன்னும் வெறித்தனமாக செய்ய தூண்டுகிறது. அன்பு மட்டும் வையுங்கள் போதும் வேறு எதுவும் தேவையில்லை. உங்கள் அன்பைக் காட்டுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றன என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.