அறிமுகமான நாள் முதல் இன்று வரை மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. காதல், குடும்ப கதைகளில் ஆரம்பத்தில் நடித்தவர், பின்பு தனது நடிப்புக்கு சவால் விடும் கதைகளையும், ஆக் ஷன் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தந்தை மோகன் எடிட்டராகவும், அண்ணன் மோகன் ராஜா இயக்குநராக இருப்பதும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் காரணமாக இருக்கிறது. ஆக் ஷன், மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி மீண்டும் தனது ஆரம்ப கால குடும்ப கதையை நோக்கி யூ டன் அடித்திருக்கிறார். இந்த வருட தீபாவளி நாளில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள 'பிரதர்' திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படம் முழுக்க, முழுக்க குடும்பக் கதையை பின்னணியாகக் கொண்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ‘பிரதர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ்.M பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, படத்தின் கதையை ஜெயம் ரவியிடம் சொல்லி ஒகே செய்து விட்டார் இயக்குநர். படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று இருவரும் டிஸ்கஸ் செய்திருக்கிறார்கள். சுமார் நூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளை சொல்லியிருக்கிறார் டைரக்டர். ‘இது வேண்டாம், அது சரியில்லை’ என்று அனைத்து தலைப்புகளையும் மறுத்துக்கொண்டே வந்திருக்கிறார் ஜெயம் ரவி. நேரம் சென்று கொண்டே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சற்று சலிப்படைந்த இயக்குநர் ராஜேஷ், "இப்படி எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணா என்னதான் டைட்டில் வைக்கிறது பிரதர்" என்று ஜெயம் ரவியை பார்த்துக் கேட்டிருக்கிறார். சட்டென்று ஏதோ உணர்ந்தவர் போல ஜெயம் ரவி, "இப்ப என்ன சொன்னீங்க? திருப்பி சொல்லுங்க" என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறார். டைரக்டர் ஏதோ தவறாகச் சொல்லி விட்டோமோ என்ற பதற்றத்துடன், "என்ன டைட்டில் வைக்கிறது பிரதர்" என்று தயக்கத்துடன் ரிப்பீட் செய்திருக்கிறார். "கடைசியில் சொன்ன பிரதர் என்பதையே டைட்டிலாக வைச்சுருங்க" என்று பட்டென சொல்லியிருக்கிறார் ஜெயம் ரவி.
‘ஆஹா, இத நாம யோசிக்கவே இல்லையே’ என்று வியப்படைந்திருக்கிறார் ராஜேஷ். “குடும்ப உறவுகளின் மதிப்பை சொல்லும் கதைக்கு இதை விட சிறந்த தலைப்பு இருக்க முடியாது” என்கிறார். மேலும், “படத்தில் சண்டை இருக்கிறது. இரத்தம் தெறிக்கும் வன்முறை இல்லை” என்கிறார் ராஜேஷ். "என் படத்திற்கு மட்டுமல்ல, மத்த யார் படத்திற்கு டைட்டில் வேணும்னாலும் என்கிட்ட வாங்க. நான் தரேன்" என்று நிகழ்ச்சியில் கூறினார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் தலை விரித்தாடும் டைட்டில் பஞ்சத்திற்கு ஜெயம் ரவியிடம் தீர்வு இருக்கிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.
'ஜெயம் ரவியாகிய நீ, இனிமேல் டைட்டில் ரவி என்றழைக்கப்படுவாய்' என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு விடுவார்கள் போல் தெரிகிறது. ஜெயம் ரவியை சுற்றி சில தனிப்பட்ட பிரச்னைகள் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்து, ‘பிரதர்’ படத்தை வெற்றிப் படமாக்குவார் ஜெயம் ரவி என்கிறார்கள் ரசிகர்கள். பிரியங்கா, பூமிகா, சரண்யா பொன்.வண்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இருக்கிறது. ஜெயம் ரவியின் வாழ்க்கைப் பயணத்தில் இவரின் பிரதரின் (அண்ணன் மோகன் ராஜா) பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கடந்த 2007ம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தீபாவளி' திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த ‘பிரதர்’ படமும் வரும் தீபாவளி நாளில் வெளியாகிறது. இந்த செண்டிமெண்ட்களை வைத்து பார்க்கும் இந்த ‘பிரதர்’ ஜெயம் ரவிக்கு ஜெயத்தை தருவான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வெல்கம் பிரதர். அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.