உலக நாயகனுக்கும் அல்லு அர்ஜூனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

Kamal Hassan - Allu Arjun
SImilarity
Published on

கமல்ஹாசனுக்கும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் ஒரு சிறு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என நீங்கள் சிந்திக்கிறீர்களா! இப்போதே சொல்கிறேன் கேளுங்கள்!

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலக நாயகனாகத் திகழும் கமல்ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் விலகினார் கமல்ஹாசன். இந்நிலையில், இவரது அடுத்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிப்புத் திறனால், ரசிகர்களை தன்பக்கம் இழுத்த கமல்ஹாசன், பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இவர் தெலுங்கு நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மெகா ஹிட் வெற்றியைப் பெற்றது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புஷ்பா படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜுன் உருவெடுத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த கங்கோத்ரி படத்தின் மூலம் கதாநாயகனாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் அல்லு அர்ஜுன். ஆனால் இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை. அவ்வகையில், கமல்ஹாசனும், அல்லு அர்ஜூனும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து திரையுலகில் கால்தடம் பதித்தவர்கள்.

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசனை பலருக்கும் தெரியும். ஆனால், அல்லு அர்ஜுன் எந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் தெரியுமா! கேட்டால் உண்மையிலேயே ஆச்சரியப்படுவீர்கள். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்ததே கமல்ஹாசனுக்குப் பேரனாகத் தான். ஆம், கடந்த 1986 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த “சுவாதி முத்யம்” என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனுக்குப் பேரனாக நடித்தார் அல்லு அர்ஜுன். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் “சிப்பிக்குள் முத்து” என்ற பெயரில் வெளியாகி பலருடைய பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
ஓடிடி தளங்களின் பார்வை கன்னடத்தின் பக்கம் திரும்புமா?
Kamal Hassan - Allu Arjun

இதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடனும், அல்லு அர்ஜூன் இணைந்து “விஜேதா” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இன்று சினிமாவில் பல குழந்தைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அன்று குழந்தை நட்சத்திரமாக நடிக்க தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை கமல்ஹாசனும், அல்லு அர்ஜூனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களாக இருக்கின்றனர். இவர்கள் இருவருமே சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸை விட்டு விலகிய கமல்ஹாசன் தற்போது தனது முழுகவனத்தையும் அடுத்தடுத்த படங்களில் செலுத்தி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தியன் 3 மற்றும் தக்லைஃப் படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com