
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையில், இசைக்கலைஞரின் பிரிந்த மனைவி சாய்ரா பானு, ரசிகர்கள் தன்னை ‘முன்னாள் மனைவி’ என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இசைத்துறையில் தனக்கென தனி வழியை உருவாக்கி, தன் இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலகளவிலும் இசையமைத்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் ஐதராபாத், மும்பை, லண்டன் என்று தினமும் வெவ்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை லண்டனில் இருந்து சென்னை திரும்பினார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாக கூறினார். தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமான் நோன்பு கடைபிடித்து வருகிறார். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் (முன்னாள்) மனைவி சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அஸ்ஸலாமு அலைக்கும். அவர் (ஏ.ஆர்.ரகுமான்) விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அல்லாஹ்வின் அருளால், அவர் இப்போது நலமாக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாததாலும், அவரை அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாக்க விரும்பாததாலும் நாங்கள் பிரிந்திருக்கிறோம். அதனால் தயவுசெய்து யாரும் 'முன்னாள் மனைவி' என்று சொல்லாதீர்கள்.
நாங்கள் பிரிந்திருந்தாலும் எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருடன் இருக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து அவரை அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள், அவரை கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி, அல்லாஹ் ஹபீஸ்’ என்று அந்த பதிவில் பேசியுள்ளார்.
கடந்தாண்டு நவம்பரில் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் விவாகரத்து அறிவித்த பிறகு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். மகன் ஏ.ஆர்.அமீன், மற்றும் இரண்டு மகள்கள், கதீஜா ரஹ்மான் மற்றும் ரஹீமா ரஹ்மான். 2022-ம் ஆண்டு கதீஜாவுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.