
இந்த வாரம் மே 16 அன்று சந்தானம் நடித்துள்ள டி டி நெஸ்ட் லெவல், சூரி நடிப்பில் மாமன், யோகிபாபு நடிப்பில் ஜோரா கை தட்டுங்க என மூன்று காமெடி கிங்ஸ் ஹீரோக்களாக நடித்துள்ள 3 படங்கள் வர உள்ளன.
இனிப்பு இருந்தால் அங்கே காரமும் இருக்க வேண்டும் இல்லை என்றால் அந்த இனிப்பு திகட்டி விடும் என்பதை போல மூன்று நகைச்சுவை இனிப்புகளுக்கு மத்தியில் கார சாரமான லெவன் என்ற திரில்லர் படம் வர உள்ளது.
நவீன் சந்திரா ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அடிப்படையில் தெலுங்கு மொழியில் ஊருவாகி உள்ளது. இந்த படம் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வரும் மே 16 அன்று திரைக்கு வருகிறது. லோகேஷ் அஜில்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரைலரை கமல்ஹாசன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். வெளியிட்ட சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளார்கள்.
சைக்கோ தனமாக நடக்கும் பல்வேறு கொலைகள், அதை கண்டுபிடிக்க திணறும் போலீஸ் என கதை செல்கிறது. "படம் முழுவதும் இரவில் நடப்பது போல இருக்கிறதே, இது ஒரு இரவில் நடக்கும் கதையா? லெவன் தலைப்புக்கு என்ன காரணம்? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போது சொன்னால் சுவாரசியம் குறைந்து விடும். கண்டிப்பாக மாறுபட்ட சைக்கோ திரில்லர் அனுபவத்தை இந்த படம் உங்களுக்கு தரும்..." என்கிறார் டைரக்டர்.
இப்படத்தின் ஹீரோ நவீன் சந்திரா ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். மெட்ராஸ், கபாலி இன்னும் பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்ற ரித்விகா இந்த படத்தில் ஹீரோயினுக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். "லெவன் இந்த மாற்றத்தை உங்களுக்கு உணர்த்தும்" என்கிறார் ரித்விகா. மூன்று நகைச்சுவை படங்களுக்கு நடுவே சூராவளியை போல் வரும் லெவன் தரும் திரையனுபவத்தை மே 16ல் ரசிகர்கள் பார்க்கலாம்.