சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் நடிகர்கள் பின்னாளில் கதாநாயகனாக மாறி விடுகின்றனர். சந்தானம், யோகிபாபு, ரோபோ சங்கர் என காமெடியில் கலக்கிய இவர்கள் தற்போது கதாநாயகனாக தங்களை சினிமாவில் நிலைநிறுத்த போராடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி காமெடியில் கலக்கி வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார். தற்போது தனது சிறப்பான நடிப்பின் மூலம் கதாநாயகனாகவும், தமிழ்நாட்டின் முன்னணி நடிகராகவும் தடம் பதிக்க தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்த சூரியை இயக்குனர் வெற்றிமாறன் 'விடுதலை பாகம் 1' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். விடுதலைப் படத்தில் நடிகர் சூரியனுடைய எதார்த்தமான நடிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றதுடன் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து கொட்டுக்காளி என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூரி விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்’ திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 16-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படக்குழு வெளியிட்ட இந்த படத்தின் 'கல்லாளியே..கல்லாளியே..' என்ற பாடல் வீடியோ ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருப்பதாக இயக்குநர் கூறினார்.
இதற்கிடையில் கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு மீண்டும் காமெடி கதாபாத்திரங்கள் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வகையில், "தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறேன். நகைச்சுவை கட்டத்தை தாண்டி வந்துவிட்டேன். இனி மீண்டும் அந்த பாதைக்கு செல்வது கடினம். கதையின் நாயகனாக நடிப்பதில் மட்டுமே திட்டவட்டமாக இருக்கிறேன். அதே நேரத்தில் என்னை வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் நான் யோசிக்க வேண்டும். அப்படியே நடித்தாலும், நல்ல கதை அம்சம் கிடைத்தால், அந்த கதாபாத்திரம் வலிமையானதாகவும், என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் நடிப்பேன்," என்று கூறி உள்ளார்.
இதுவரை காமெடியில் கலக்கி வந்த சூரி, இனி கதாநாயகனாக ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.