

மலையாளத்தில் திரைக்கதைக்காக விருதுகளை வாங்கிய சாஜீவ் பழூர் இயக்கிய முதல் தமிழ் படமாக வந்துள்ளது என்ன விலை?. இப்படத்தில் கருணாஸ், நிமிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அக்னி தீர்த்தத்தில் இறந்தவர்களுக்கு நேர்த்திக்கடன் செய்யும் வழக்கம் உள்ளது. இந்த தீர்த்ததில் பலர் காசுகளை தானமாக வீசி செல்வார்கள். இந்த காசுகளை கடலுக்குள் மூழ்கி தேடி எடுக்கும் பழக்கம் கொண்டவர் கருணாஸ். இவரைப் போலவே பலரும் இந்த வேலையை செய்கிறார்கள்.
ஒரு நாள் இவருக்கு கடலுக்கு அடியில் தங்கம், வைரம், வைடூரியம் வேலைப்பாட மைந்த ஒரு பதக்கம் கிடைக்கிறது. கருணாஸ் இந்த பதக்கத்தை தெரிந்த போலீஸ்காரரிடம் தருகிறார். போலீஸ்காரர் அந்த பதக்கத்தை தானே அபகரிக்க எண்ணுகிறார். இதை உயர் அதிகாரி தெரிந்து கொள்ள, அபகரித்த போலீஸ்காரர் கருணாஸ் மீது திருட்டு பட்டம் கட்டி சிறைக்கு அனுப்புகிறார்.
புகழ் பெற்ற அட்வகேட்டான நிமிஷா இவருக்காக ஆஜராகிறார். இவர் மீது ஜோடிக்கப்பட்டது பொய் வழக்கு என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். மேலும் "அப்பாவியான கருணாஸை குற்றவாளி போல் காவல் துறையும் ஊடகங்களும் காட்டிவிட்டன. ஒரு எளிய மனிதருக்கான மானம் மரியாதைக்கு என்ன மதிப்பு? இதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசாங்கமே முன்வந்து என் கட்சிக்காரர் கருணாஸ் ஒரு நிரபராதி என்று ஒவ்வொரு ஊடகத்திலும் சொல்ல வேண்டும். மேலும் கடலுக்கு அடியில் மூழ்கி எடுக்கும் சில்லறை காசுகள் எப்படி கருணாஸ்க்கு சொந்தமோ, அதேபோல அந்த பதக்கமும் கருணாஸ்க்கே சொந்தமாக வேண்டும்" என்றும் வாதிடுகிறார். இந்த வழக்கு தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கும் பிரபுவும், அட்வகேட் ஜெனரல் ஒய். ஜி. மகேந்திராவும் ஒரு முக்கிய முடிவு எடுக்கிறார்கள். இந்த முடிவு என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை.
எதிர்பார்த்தது..
படத்தின் இயக்குனர் சாஜீவ் பழூர் திரைக்கதைக்காக விருதுகள் வாங்கியவர் என்பதால் அவரின் முதல் தமிழ் படம் திரைக்கதையில் மிகப்பெரிய அளவில் எழுதப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்புடன் உட்கார்ந்தோம்.
கிடைத்தது..
மிகப்பெரிய திரைக்கதை ஆளுமை அதுவும் மலையாள சினிமாவில் என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். ஆனால் தமிழ் படத்தில் அவர் திரைக்கதையின் நுட்பங்கள் பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை. இந்த கதை ஒரு நேராக தொடங்கி ஒரு நேர்கோட்டில் பயணித்து முடிகிறது. திரைக்கதையில் பெரிய ட்விஸ்ட் இல்லாதது ஒரு குறை தான். திரைக்கதையில் பரபரப்பை எதிர்பார்த்தால் நமக்கு கிடைத்தது சற்று ஏமாற்றமான திரைக்கதை தான்.
கருத்து..
பொதுவாக ஊடகங்களில் எளிய மனிதர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நீதிமன்றத்தில் வந்தால் அந்த மனிதர்களை மையப்படுத்தி பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். அடுத்த பரபரப்பான செய்தி வந்தவுடன் இந்த எளிய மனிதர்களின் செய்தி மறைந்துவிடும். இது ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் நிறையவே இருக்கின்றன. பழி சுமத்தப்படும் அந்த மனிதர் உண்மையான குற்றவாளியா? அதன்பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்ற ஆர்வம் அல்லது பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதில்லை.
ஊடகங்களே நீதிமன்றங்களாக ஆகிவிடும் அவலம் நமது நாட்டில் தான் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எளிய மனிதர்கள் தான் என்பதை இந்த படம் கருத்தை கொண்டுள்ளது. இதற்காக திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட கருத்துக்காக டைரக்டரை பாராட்டலாம்.
கம் பேக் கருணாஸ்..
கருணாஸ் அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு மீண்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு "நான் இனி நகைச்சுவை நடிகன் அல்ல என்னால் மிகச்சிறந்த கதாபாத்திரத்தை நடிக்க முடியும்" என்று தனது எளிய மீனவ கதாபாத்திரத்தில் புரிய வைத்துள்ளார்.தமிழ்நாட்டில் இருக்கும் எளிய மனிதர்களின் அடையாளமாக இவரின் நடிப்பு உள்ளது. இனி கருணாசை குணச்சித்திர கதாபாத்திரத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.
அட்வகேட் நிமிஷா..
அடிப்படையில் மலையாள நடிகையான நிமிஷா தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் தற்போது நடித்து வருகிறார். ஒரு அட்வகேட் ஆக இவர் வைக்கும் விஷயங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. ஒரு சாதாரண கதாநாயகி போல் இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நிமிஷா. படத்தில் இருக்கும் சில குறைகளை மறக்கடிக்க செய்பவது இவர் பேசும் நீதிமன்ற வசன காட்சிகள் தான்.
பிரபு, ஒய் ஜி மகேந்திரன்..
பிரபு, ஒய் ஜி மகேந்திரன் இருவரும் கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறார்கள். பெரிய அளவில் இவர்கள் இருவருக்கும் நடிக்க ஸ்கோப் இந்த படத்தில் இல்லை.
இசை..
சாம் சி எஸ் கடற்கரையில் மீனவ குப்பத்தை காட்டும்போது ஒரு விதமான இசையையும், நீதிமன்ற காட்சிகளை காட்டும் போது வேறு விதமான இசையையும் இசைத்துள்ளார்.
என்ன விலை தரலாம்?
நம் நாட்டில் உள்ள எளிய மனிதர்களுக்கும் மானம் மரியாதை இருக்கிறது. காவல்துறை நீதிமன்றங்கள் குறிப்பாக ஊடகங்கள் அவர்கள் இருக்கும் மானம் மரியாதையை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்று ஆணி அடித்தார் போல் சொல்கிறது இப்படம். மேலும் இவர்களை இவர்களின் மானத்தை வாங்கும் இந்த மீடியாக்கள் இவர்கள் சரியானவர்கள் அல்லது குற்றமற்றவர்கள் என்று தெரிந்த பிறகு இவர்கள் மானம், மரியாதைக்கு என்ன விலை தர போகிறது என்ற கேள்வியை இப்படம் எழுப்புகிறது.
மேலை நாடுகளில் அவ்வளவு சாதாரணமாக எளிய மனிதர்களை மீடியாக்கள் முன்பு விமர்சித்து விட முடியாது. ஆனால் இங்கே இது சர்வசாதாரணமாக நடக்கிறது என்றும் இப்படம் புரிய வைத்துள்ளது.
சரி இந்த படத்திற்கு என்ன விலை தரலாம்? இந்த படத்தை நீங்கள் பாருங்கள். இந்த படத்திற்கு கருத்துக்காக என்ன விலை தரலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த படத்தில் திரைக்கதைகள் சில குறைகள் இருந்தாலும் கருத்துக்காக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்.
சமூக ஊடகங்களாலும் காவல்துறையாலும் பொய்யாகக் குற்றம்சாட்டப்படும் எளிய மனிதர்களின் மானத்திற்கு என்ன மதிப்பு என்பதை இத்திரைப்படம் கேள்வி கேட்கிறது. கருணாஸின் அழுத்தமான நடிப்பும், நிமிஷாவின் நீதிமன்ற உரையாடல்களும் இப்படத்திற்கு வலிமை சேர்க்கின்றன.