Interview: "நிறத்தை விட திறமைதான் முக்கியம்" - சேஷ்விதா கனிமொழி ஓபன் டாக்!
"'நீ அவ்வளவு கலரா இல்லை, சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கடினம்' என என்னிடம் பலர் சொன்னார்கள். ஆனால் ரசிகர்கள் என் கலரை பார்க்கவில்லை. என் நடிப்பைதான் பார்க்கிறார்கள்" என்கிறார் சேஷ்விதா கனிமொழி
'பரமசிவன் பாத்திமா', விஜய் ஆன்டனியின் 'மார்கன்' போன்ற படங்களில் நடித்த கனிமொழி தற்போது 'குற்றம் புதிது' படத்தில் நடித்துள்ளார். மார்கன் படத்தில் இவர் நடித்த நெகடிவ் ரோல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. குற்றம் புதிது படத்தின் ப்ரோமஷன் விழாவில் ரசிகர்கள் சேஷ்விதா கனிமொழியை சூழ்ந்து கொண்டு "இவ்வளவு அழகா இருந்து கொண்டு எப்படி நெகடிவ் ரோலில் நடிக்கிறீங்க..." என்ற கேள்வியை முன் வைத்தார்கள். இதே கேள்வியை நாமும் முன் வைத்து 'குற்றம் புதிது' ப்ரோமோஷனுக்கு வந்திருந்த சேஷ்விதா கனிமொழியிடம் பேட்டியை துவங்கினோம்.
ஹீரோயினாக நடிக்கும் நீங்கள் எப்படி தைரியமாக மார்கன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்தீர்கள்..?
மார்கன் படத்தில் வரும் 'நிறம்' என்ற விஷயத்தை நானும் சந்தித்து உள்ளதால் மார்கன் படத்தில் எனக்கு தரப்பட்ட கேரக்டரை உணர்ந்து நடித்தேன்.
விஷயம் என்றால் எந்த மாதிரியான விஷயம்?
சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் சிவந்த நிறமாக இருக்க வேண்டும், சிவந்த நிறமாக இல்லாத உன்னால் ஜெயிக்க முடியாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால் சினிமாவில் ஜெயிக்க நிறத்தை விட திறமைதான் முக்கியம் என்று தமிழ் ரசிகர்கள் எனக்கு அங்கீகாரம் தந்து புரியவைத்து விட்டார்கள்.
நீங்கள் ஹீரோயினாக நடித்து விரைவில் வெளிவர உள்ள 'குற்றம் புதிது' படத்தில் உங்கள் ரோல் என்ன?
என் கேரக்டரையும், படத்தின் கதையையும் சொல்ல முடியாது. இது திரில்லர் கதை. ஒரு அன்பான அப்பாவுக்கு, அன்பு மகளாக நடிக்கிறேன். மதுசூதன ராவ் எனக்கு அப்பவாக நடிக்கிறார். ராவ் சாரின் நடிப்பில் என் அப்பாவை பார்க்கும் உணர்வு வந்தது. நான் சாரை அப்பா என்றுதான் கூப்பிடுவேன்.
பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் போல் செல்க்டிவான கேரக்டரில் நடிக்கிறீங்க போல் தெரியுதே?
உண்மைதான். நான் எனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் கதையில் இருக்கிறதா என்று உறுதி படுத்தி கொண்டு தான் நடிக்க ஓகே சொல்கிறேன். இப்படி நடித்தால் தான் மக்கள் மனதில் நிற்க முடியும்.
கன்னட பெண்ணான உங்களுக்கு கனிமொழி என்று எப்படி பெயர் வைத்தார்கள்?
சார் என் அப்பா, அம்மா இரண்டு பேருமே சேலம் தான். நான் பெங்களூரில் வளர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு.
இப்போது நிறைய தமிழ் பொண்ணுங்க சினிமாவில் நடிக்கிறாங்க. இந்த மாற்றம் எப்படி நடந்தது?
இன்றைய தினத்தில் இளம் பெண்கள், தான் ஆசைப்படும் விஷயத்தை அடைய விடா முயற்சி எடுக்கறாங்க. இதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருக்காங்க. வேறென்ன வேண்டும் சாதித்து காட்ட வேண்டியது தான்.