Interview: "கலப்பு திருமணம் ஒன்றுதான் வழி" : எழுத்தாளர் - இயக்குநர் தமயந்தி!
தமிழ் நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களுக்கு தனது கோபத்தையும், அதே சமயத்தில், தீர்வையும் வெளிப்படுத்தும் முற்போக்கு சிந்தனை கொண்ட, 'குரல் கொடுக்கும்' எழுத்தாளர் தமயந்தி, கேமரா வழியே கதை சொல்ல வருகிறார்! தமயந்தி பல நாவல்களை எழுதி உள்ளார். ஆனந்த விகடனில் வெளியான இவரது 'ஆண் பால், பெண் பால் ' தொடர் வாசகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
எழுதாளர்கள் டைரக்டர்களாக அவதாரம் எடுக்கும் காலம் இது. தமயந்தியும் 'காயல்' என்ற படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகம் ஆக உள்ளார். நமது கல்கி ஆன் லைன் இதழுக்கு அளித்த நேர்காணலில் தனது படத்தை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.....
எழுதாளர் to இயக்குநர் பயணம் எப்படி இருந்தது?
இரண்டும் வேறு வேறு பயணங்கள். வெவ்வேறு நோக்கங்கள். நான் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த இயக்குநர் பாலசந்தர் அவர்களின் மகன் கைலாசத்துடன் இணைந்து ஆவணப் படம் இயக்கினேன். ஒரு குறும்படம் ஒன்றையும் இயக்கி உள்ளேன். எழுத்தை போலவே விஸுவல் மீடியாவும் எனக்கு பழக்கமான ஒன்று தான்.
பேனா பிடித்த கைகள் கேமராவை பிடிக்க குறிப்பாக காரணங்கள் ஏதாவது உண்டா?
நாம் உணர்வுகளை வெளிப்படுத்த எழுத்து போலவே சினிமாவும் ஒரு ஊடகம் என்று நான் நினைத்ததால் கேமரா வழியே கதை சொல்ல முயற்சி செய்கிறேன். எழுத்து துறையில் இருக்கிறேன். வானொலியில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. இப்போது சினிமா.
'காயல்' என்றால் என்ன அர்த்தம்?
காயல் என்றால் கடல் சார்ந்த பகுதி என்று பொருள். காயல் என்பதற்கு பிரிவு என்ற பொருளும் உண்டு. பிரிவு, கடல் சார்ந்த இடத்தில் கதைக் களம் என்ற இரண்டு அம்சங்களும் படத்தில் இருப்பதால் காயல் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
காயலின் கதை மாந்தர்கள் யார்?
நமது சமூகத்தில் ஜாதிக்காக ஆணவ கொலைகள் நடக்கின்றன. ஜாதிய சிந்தனை பல இடங்களில் இன்னும் உயர்வாக பார்க்கப்படுகிறது. இப்படி நான் சொல்லும் போதே ஜாதியை தூக்கி பிடிக்கும் ஆண்களின் முகம் தான் உங்களுக்கு நினைவுக்கு வரும். ஆண்களுக்கு இணையாக நம் சமூகத்தில் பெண்களும் ஜாதியை குடும்பத்தில் தூக்கி பிடிக்கிறார்கள். குலப் பெருமை, குடி பெருமை என்பதெல்லாம் குடும்பத்தில் பெண்கள் தான் தூக்கி சுமக்கிறார்கள்.
எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறீ ர்கள்..?
தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படும் ரிதன்யா தற்கொலை விஷயத்தை எடுத்து கொள்வோம். ரிதன்யா தனது புகுந்த வீட்டில் தனக்கு நடந்த மோசமான விஷயங்களை தனது தாயிடம் கண்டிப்பாக சொல்லி இருப்பார். ஆனால் ரிதன்யா வின் அம்மாவோ "பொறுத்து போ", குடும்ப மானம், ஜாதி வழக்கம் என்பது போன்ற விஷயங்களை சொல்லி ரிதன்யாவின் குரலை புறந்தள்ளி இருப்பார். ரிதன்யாவின் தாயின் மனதில் குலப் பெருமை, குடி பெருமை 'குடி கொண்டிருக்கும்' என நினைக்கிறேன்.
இது போன்ற விஷயங்கள் தான் ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணம். என் சொந்த மண்ணான திருநெல்வேலி பகுதியில் ஜாதியை உயர்த்தி பிடிப்பதில் பல குடும்பங்களில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. இங்கே ஆணவ படுகொலைகள் நடக்க இதுவும் ஒரு காரணம். நான் பார்த்த, உணர்ந்த விஷயத்தை காயலில் சொல்ல போகிறேன்.
திருநெல்வேலி - பாளையங்கோட்டை பகுதியை தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்பார்கள். அந்த அளவிற்கு நெல்லையில் கல்வி நிலையங்கள் அதிகம். இந்த கல்வி அங்கே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லையா?
மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதே கசப்பான, நிதர்சனமான உண்மை.
ஜாதியை ஒழிக்க வேறு என்னதான் வழி?
கலப்பு திருமணம் ஒன்றுதான் வழி.
'சேச்சி' அனுமோல் வந்தது எப்படி?
இந்த படத்தில் இந்த கதையை எழுதி முடித்தவுடன் சத்யராஜ் அவர்களிடம் கதையை சொன்னேன். சத்யராஜ் அவர்கள் இப்படத்தில் உள்ள கதாபாத்திரத்துக்கு அனுமோல் சரியாக இருப்பார் என்று சொன்னார். அனுமோல்காக இரண்டாண்டுகள் காத்திருந்து கால்ஷீட் கிடைத்த பின்பு படத்தை இயக்கினேன். வேறு எந்த நடிகையுடனும் ஒப்பிட முடியாத நடிகை அனுமோல். படம் பார்த்த பின்பு இதை நீங்கள் உணர்வீர்கள்.
ஒரு பெண் டைரக்டராக இருப்பது சிரமமான விஷயமா?
சினிமாவை விட எழுத்து துறையில் தான் நான் பெண்ணாக சந்தித்த சவால்கள் அதிகம். சினிமாவில் இருக்கும் பல ஆண் உதவி இயக்குநர்களை போல் போராடி தான் இயக்குநராக வந்திருக்கிறேன். சினிமா, எழுத்து பணிகளில் போதுமான வருமானம் கிடைக்காது என்பதால் சில சமையல் பொருட்களை நானே தயாரித்து, விற்று பொருள் ஈட்டுறேன்.