கன்னட நடிகர் தர்ஷன், ரசிகர் கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தான் சிறையில் பெரும் துன்பத்தை அனுபவிப்பதாக கூறி, தனக்கு "ஒரு துளி விஷம்" தரும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது கண்ணீருடன் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
ரேணுகாசாமி என்ற ரசிகர், கன்னட நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மற்றும் அவதூறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பவித்ரா கவுடா, இந்த தகவலை நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, தர்ஷனின் அடியாட்கள் சிலர் ரேணுகாசாமியைச் கடத்திச் சென்று, அவரைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ரேணுகாசாமி உயிரிழந்தார். அவரது உடல் பெங்களூரில் உள்ள ஒரு சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.அன்
இப்படியான நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சூரிய ஒளியை பார்க்கவில்லை என்றும், தன் கைகளில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தர்ஷன் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் வாழ முடியவில்லை என்றும், தனக்கு மட்டும் விஷம் கொடுக்கும்படி கேட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி, இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றத்தில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். சிறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, தலையணை, படுக்கை விரிப்புகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவு கேட்டு தர்ஷன் வைத்த கோரிக்கைகள் குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
மேலும், தர்ஷன் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை கர்நாடகாவின் மற்ற சிறைகளுக்கு மாற்றவும் வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டபோது கட்டுமஸ்தாக இருந்த தர்ஷன், காணொலி காட்சி விசாரணையின்போது பலவீனமாக காணப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய செப்டம்பர் 19ஆம் தேதி என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. சாட்சிகளின் விசாரணை விரைவில் தொடங்கும் என்றும் கூறியது. கர்நாடக உயர் நீதிமன்றம் தர்ஷனுக்கு வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.