
தமிழ் திரையுலகில் மெல்ல மெல்ல வளர்ந்து தனது திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று தனக்கென தனி இடத்தை பிடித்து அசைக்க முடியாத முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய கலைப்பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்று பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குநர், பாடகர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் ‘ப.பாண்டி', ‘ராயன்', ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய 3 படங்களை இயக்கியுள்ளார். ‘இட்லி கடை' என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார். தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார்.
இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ நேரடி தெலுங்கு படமாகும்.
இந்த படத்தில் தனுஷ் 'தேவா'என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டிம், படத்தொகுப்பை கார்த்திகா ஸ்ரீனிவாசும் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தனுஷின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மலையாள பட உலகில் பிரபல நடிகரும், முன்னனி நடிகர் மம்முட்டியின் மகனுமாக நடிகர் துல்கர் சல்மான் குபேரா படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, துல்கர் சல்மான் தனது தயாரிப்பு நிறுவனமான 'வே பாரர் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் ‘குபேரா’ படத்தினை கேரளாவில் வரும் ஜூன் 20-ம்தேதி வெளியிட உள்ளது. கேரள பட உரிமையை துல்கர் சல்மான் வாங்கியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.