
நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி கதை எழுதி ஹீரோவாக நடித்த ‘மாமன்’ திரைப்படம் கடந்த மே மாதம் 16-ம்தேதி வெளியானது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹேசம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு படத்துக்கு பக்கபலம் என்று சொல்லலாம்.
தாய் மாமனுக்கும், ஆறு வயது மருமகனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாக குடும்பங்கள் கொண்டாடும் விதமாக காட்டியுள்ளதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. குறிப்பாகத் தாய்மாமன் உறவு ஒரு குழந்தைக்கு ஏன் தேவை என்கிற கருத்தை அழகாகவே சொல்லியிருக்கிறார்.
அதேபோல் கணவன் - மனைவி பிரச்சனையில் கணவன் விட்டுக் கொடுத்துச் சென்றால் என்னதான் தப்பு என்பதையும் மனைவி இன்னொரு தாய்க்குச் சமம் என்பதையும் இந்த படத்தின் கதை பேசுகிறது. அக்கா - தம்பி உறவையும் படம் நேர்த்தியாகப் பேசியிருக்கிறது.
நகரத்தில் விட கிராமப்புறங்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல இடத்தில் இருக்கும் மாமன், மக்களின் பெரும் ஆதரவுடன் திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் ரூ.40 கோடி வசூலித்து மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி வெற்றி திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம்.
சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக இருந்து தற்போது கதாநாயகர்களாக நடித்து வரும் நிலையில், சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, யோகி பாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’ மற்றும் சூரியின் ‘மாமன்’ திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ‘ஜோரா கைய தட்டுங்க’ படங்களை ஓரங்கட்டி, பின்னுக்கு தள்ளி ‘மாமன்’ வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் 30 நாட்கள் ஓடிய பின்பு தான் ஓடிடியில் வெளியாகும் என்பதால் ஜூன் இரண்டாவது வாரம் குடும்பங்கள் கொண்டாடும் ‘மாமன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.