
படம் முழுதும் அழுகை என்று சொல்கிறார்களே என்று பார்க்காமல் விட்டு வைத்த படம் தான் மாமன். இந்த டிக்கெட் பிரச்சனையால், வந்ததற்கு இதையாவது பார்த்து விட்டுச் செல்வோம் என்று நுழைந்தாகிவிட்டது.
பார்த்துப் பழகிய அக்கா தம்பி கதை தான். இதில் அக்காவின் மகனோடு அதிகப் பாசம் வைப்பதால் ஒரு மாமனுக்குத் தனது குடும்பத்தோடு எவ்வளவு ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த உறவுகளுக்கு இடையே நடக்கும் சண்டையில் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒன்று சூரி. இவர் சில வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகராக இருந்தார். பல படங்களில் கடுப்பைக் கிளப்பக்கூடிய நகைச்சுவை நடிகராக இருந்தார் என்பதே நமக்கு நினைவுக்கு வரவில்லை. அந்த அளவிற்கு ஒரு தனி கதாநாயகனாகத் தன்னை இரண்டே படங்களில் நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்.
இரண்டாவது இவர் மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி. தன்னை சற்றும் நினைவில் கொள்ளாமல் அக்கா குடும்பம் அவரது மகன் மட்டுமே வாழ்க்கையென இருக்கும் கணவர் சூரியை எண்ணி வெதும்புவது, ஒரு கட்டத்தில் அந்த அக்கா செய்த ஒரு காரியத்திற்காக அனைவர் முன்னிலையிலும் பொங்கி எழுவது என அந்தப் பாத்திரத்திற்கு முழு பலம் சேர்த்திருக்கிறார்.
மூன்றாவது படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் வஹாப். படத்தின் பின்னணி இசையில் சாதாரணக் காட்சிகளைக் கூட அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார். சோகக் காட்சிகளில் ரசிகர்கள் அழ நான் பொறுப்பு என்று வெளுத்துக் கட்டியிருக்கிறார். இவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தான். கற்றிருக்கும் மொத்த வித்தைகளையும் ஒரே படத்தில் இறக்கி வைக்க எண்ண வேண்டாம். போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
ஜெயப்ரகாஷ் மற்றும் சூரி இருவருக்கிடையே ஒரு காட்சி வரும். அமைதியான குரலில் ஜெயப்ரகாஷ் தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தைச் சொல்லிச் சூரியின் இந்த நிலைபாடு, அதில் உள்ள தவறைப் பற்றிச் சொல்லும் ஒரு காட்சி மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது.
அதே போல மருத்துவமனையில் நடக்கும் ஒரு காட்சியும், திருமண வீட்டில் நடக்கும் ஓர் உணர்ச்சிகரமான காட்சியும். சாதாரணமாகவே கண்ணீர் விடத் தயாராக இருக்கும் பெண் ரசிகர்கள் குடும்பஸ்தர்கள் அனைவரையும் சொட்டினால் போதாது கண்ணீர் கொட்ட வேண்டும் என்று நினைத்தது தான் இந்தப்படத்தின் பிரச்னை.
ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் தம்பதியர் பாத்திரங்கள் வரும்போது இப்படித் தான் முடியப்போகிறது என்பதும் முதல் காட்சியிலேயே நமக்குத் தெரிந்து விடுவதால் அந்தப் பாத்திரங்கள் கொடுக்க வேண்டிய அழுத்தம் தவறி விடுகிறது. ஒரு ஐந்து வயது சிறுவனை அடக்கி வைக்க முடியாதா? என்னதான் செல்லமாக இருந்தாலும் புதிதாகக் கல்யாணம் ஆன தம்பிக்கும் அவன் மனைவிக்கும் இடையில் பிரச்னை வருகிறது என்று தெரிந்தும் அந்தப் பையனை அப்படியேவா விட்டுவிட்டார்கள். தங்கள் வீட்டிற்கு மாமா இனிமேல் வரமாட்டார் என்று சொல்வதற்காக இப்படியொரு விஷயத்தையா செய்வார்கள்?
இது போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கமாட்டார்கள். மேலும் இந்தப் படம் பி சி சென்டர்களில் ஓடினால் போதும் (இப்பொழுது அந்த மாதிரி பாகுபாடெல்லாம் கிடையாது); எங்கள் குறி தாய்மார்கள் தான் என்று இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன்.
ஜீ 5 தொலைக்காட்சியில் விலங்கு என்ற ஒரு நல்ல கிரைம் தொடரை இயக்கியவர் இவர். அதில் நடித்திருந்த விமல் இதிலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார்.
ஒரு சிறுவனால் ஏற்படும் பிரச்னை அந்தச் சிறுவனாலேயே கடைசியில் முடிவது நல்ல விஷயம். அக்கா கணவராகப் பாபா பாஸ்கர், அக்காவாக சுவாசிகா, அம்மாவாக கீதா கைலாசம் அனைவரும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். லப்பர் பந்துக்குப் பிறகு சுவாசிகாவிற்கு இன்னொரு கனமான பாத்திரம். அவரும் அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் தேவையில்லை. ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் வேண்டாம். அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளும், கவர்ச்சி நடனங்களும் இருக்காது. ரசிகர்கள் மெகா சீரியல் என்றே சொன்னாலும் குடும்பப்படங்களுக்கு அவர்கள் ஆதரவு என்றுமே இருக்கும். இந்த விஷயங்களை மட்டுமே மனதில் வைத்து இந்தக் குழு செயல்பட்டிருக்கிறது. மிகையுணர்ச்சிகள் சற்றே ஓவர்டோசாக இருந்தாலும் இரண்டாவது வாரத்திலும் இந்தப்படத்திற்கு குடும்பமாக ரசிகர்கள் படையெடுப்பது அந்த முயற்சியில் அவர்கள் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் தப்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.