
தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகரும், ஆந்திராவின் துணை முதல்வருமாக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண். இயக்குனர் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண், பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தே கால் ஹிம் ஓஜி'. ‘ஓ.ஜி.' என்று அழைக்கப்படும் இந்த படம் வரும் 25ம் தேதி வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ஆந்திர அரசு பல சலுகைகளை அள்ளி வீசியிருக்கிறது.
அதன்படி ஆந்திர முழுவதும் நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் 10 நாட்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் வரை திரையிடலாம் என்றும் சிறப்பு காட்சி அல்லாத பிற காட்சிகளுக்கும் ரூ.1,000 வரை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்பனை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
திரைத்துறையை சேர்ந்த அனைத்து மொழிகளிலும், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், பவன் கல்யாண் படத்திற்கு அதிகளவு சலுகைகளை ஆந்திரா அரசு அள்ளி வீசியிருப்பது ஆந்திர மாநில ரசிகர்களிடமும், சினிமாத்துறையினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் சுமார் ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியான ‘ஹரிஹர வீரமல்லு' என்ற திரைப்படம் ரூ.100 கோடியை மட்டுமே வசூல் செய்து, படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘ஹரிஹர வீரமல்லு' படத்தை போன்று 'தே கால் ஹிம் ஓஜி' தோல்வி அடையக்கூடாது என்பதற்காக டிக்கெட் விலையை ஏற்றுவதன் மூலம் ‘ஓ.ஜி.' படத்தின் வசூலை அதிகப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் ஆந்திர அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.
ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வரும் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டருக்கு அதன் பிறகு நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
2023ம் ஆண்டிலிருந்து இப்படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆந்திர துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பொறுப்பேற்றதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படம் வரும் 25-ம்தேதி வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'தே கால் ஹிம் ஓஜி' படம் வெளிவருவதற்கு முன்பே பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.