
ஆந்திர துணை முதல்வராகவும், தெலுங்கு பட உலகில் முன்னனி கதாநாயகனாகவும் வலம் வருபவர் பவன் கல்யாண். 1996-ம் ஆண்டு 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பவன் கல்யாண். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. மொத்தம் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் பவன் கல்யாண் சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியதால் ரசிகர்கள் பவர் ஸ்டார் பட்டம் அளித்தனர். தென்னிந்தியா முழுவதும் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமாக வலம் வரும் பவன் கல்யாணை இயக்க பல முன்னணி திரைப்பட இயக்குனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வரம் வரும் பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வர் ஆன பிறகும் கூட தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்து வருகிறார்.
பவன் கல்யாண் தற்போது ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார்.
அவ்வகையில் இந்தியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வருகிற ஜூலை 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டிரெய்லருக்கு நடிகர் அர்ஜுன் தாஸ் பின்னணி குரல் கொடுத்திருப்பது மேலும் படத்திற்கு தனித்துவத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் வெளியீட்டு உரிமைகள் நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்க அனைத்து மொழிகளிலும் கடுமையான போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபலமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.