
"சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் தரமான படங்களை எடுக்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எவ்வித வரவேற்பும் கிடைப்பதில்லை. மாஸ் ஹீரோக்களின் படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துகளை அதிகம் சொல்வதில்லை. ஆனாலும் ரசிகர்கள் அவர்களைத் தான் முதன்மையானவர்களாக கருதுகின்றனர். எங்களைப் போன்றவர்களின் உழைப்பை இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை" என நடிகர் சமுத்திரக்கனி ஆதங்கமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கியவர் சமுத்திரக்கனி. அதிலிருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த சமுத்திரக்கனியை நடிகராக்கி அழகு பார்த்தவர் நடிகர் சசிகுமார் தான். சமுத்திரக்கனியின் நெருங்கிய நண்பரான சசிகுமார், சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சமுத்திரக்கனிக்கு வழங்கினார். முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய சமுத்திரக்கனிக்கு, பட வாய்ப்புகள் குவிந்தன.
தனக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த சசிகுமாருக்கு நன்றிக்கடனாக நாடோடிகள் படத்தை இயக்கி மெகா வெற்றியைக் கொடுத்தார் சமுத்திரக்கனி. நண்பர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நாடோடிகள் படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதன்பின் போராளி, நிமிர்ந்து நில் மற்றும் அப்பா போன்ற படங்களை இயக்கினார் சமுத்திரக்கனி. இவரது சினிமா பயணத்தில் 'அப்பா' மற்றும் 'சாட்டை' ஆகிய படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறின. ஆனால் இம்மாதிரியான படங்கள் மக்களுக்கு உடனே சென்று சேர்ந்து விடாது என சமீபத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சமுத்திரக்கனி.
தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனி, “பெரிய நடிகர்களின் படங்களைக் காண ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் டிக்கெட் வாங்குவார்கள். முதல் ஷோவில் படம் பார்க்க எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் முண்டியடித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் நல்ல தரமான படங்களைக் காண ரசிகர்கள் இதுபோல் வருவதில்லை. அப்பா மற்றும் சாட்டை போன்ற படங்கள் எல்லாம் மக்களுக்கு சென்றடைய பல நாட்கள் ஆகிறது. அதற்குள் இம்மாதிரியான படங்களை தியேட்டரில் இருந்து தூக்கி விடுவார்கள்.
தொலைக்காட்சியில் போடும் போது படத்தைப் பார்த்து விட்டு, இந்தப் படமும் நல்லா தான் இருக்கு என சொல்லி விட்டு கடந்து விடுவார்கள். ஆனால் நல்ல படங்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அளப்பரியது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சேர்த்து வைத்த பணத்தை முதலீடாக்கித் தான், நான் அப்பா படத்தை எடுத்தேன். ஆனால் இப்படத்தால் நான் நஷ்டமடைந்தது தான் உண்மை,” என கூறினார்.
தரமான நல்ல படங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ தான் வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. ஆனால் பல படங்கள் முதலீட்டைத் தேற்றிக் கொள்ளவே எண்ணற்ற தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு நல்ல படங்களுக்கான வரவேற்பு ஓரளவு பரவாயில்லை. இருப்பினும் பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சிறிய படங்களுக்கு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.