

இயக்குனர் வீ. சேகர் நகைச்சுவை அம்சங்கள் கொண்ட திரைக்கதையில், புரட்சிக் கரமான சிந்தனைகளை புகுத்தி திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். இவரது படங்களில் பட்ஜெட் எல்லாம் மிகவும் குறைவாகவே இருக்கும் , பெரும்பாலும் ஒரு தெருவில் உள்ள நான்கு ஐந்து வீடுகளில் உள்ள மக்களின் கதைகளை அடிப்படையாக வைத்தே கதை எழுதி இருப்பார். இவரது படங்களின் சிறப்பு , பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் சாதாரண நடிகர்களையும் கவுண்டமணி , செந்தில் , விவேக் , வடிவேலு , கோவை சரளா ஆகியோரை வைத்தே பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
வீ.சேகர் தொடக்க கால வாழ்க்கை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் , 1953ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வீ.சேகர் பிறந்தார். இவரது தந்தை பெயர் எஸ்.வெங்கடேசன் , தாயார் பெயர் பட்டம்மாள் ஆகும். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் ஏவி.எம்.ஸ்டுடியோ லேப்பில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் மாலை நேரக் கல்லூரியில் எம்.ஏ படித்துக் கொண்டே மாநகராட்சி சுகாதார துறையில் பணி செய்தார். சில வருடங்கள் கே.பாக்கியராஜின் உதவியாளராக கதை துறையில் வேலை செய்தார்.
சினிமா பயணம்:
முதன் முதலாக "நீங்களும் ஹீரோதான்" திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் சாதாரண மனிதர்கள் , சினிமா நடிகர்கள் மீது தீவிர நாட்டம் காட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியது. சினிமா துறையில் இருந்து கொண்டு நடிகர்களை பற்றி துணிச்சலான கருத்துக்களை தைரியமாக கூறி , திரைப்படம் எடுத்தது அந்த காலத்தில் இவரது துணிச்சலை மிகவும் பாராட்டியது.
அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த " வரவு எட்டணா செலவு பத்தனா " என்ற திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து, அவரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. இந்தத் திரைப்படம் "சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதையும் பேராசைப்பட்டு தவறான வழியில் பணம் சம்பாதிக்க கூடாது" என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது. இதில் கவுண்டமணியின் 'அஞ்சாத சிங்கம் ' கேரக்டர் இன்று வரையில் மக்களின் மனதில் நிற்கிறது. பெரிய வெற்றியை பெற்றாலும் வீ.சேகர் பெரிய பட்ஜெட் படங்களையோ பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க முயற்சிக்கவில்லை.
வீ.சேகரின் இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு திரைப்படமான " காலம் மாறிப் போச்சு" , பெண் குழந்தைகளின் சொத்து உரிமை பற்றியும் , அவர்களை ஆண் குழந்தைக்கு நிகராக பாகுபாடு இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதையும் , அவரது வழக்கமான நகைச்சுவை பாணியில் சொல்லப்பட்டது. இந்த திரைப்படமும் வெற்றி பெற்றது.
இது மட்டுமல்லாமல் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் , பொறந்த வீடா புகுந்த வீடா, பொங்கலோ பொங்கல், எல்லாமே என் பொண்டாட்டிதான் , விரலுக்கு ஏத்த வீக்கம் ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை , வீட்டோட மாப்பிள்ளை , நம்ம வீட்டு கல்யாணம் , ஆளுக்கொரு ஆசை' போன்ற திரைப் படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் 'ஹெந்தீர் தர்பார்' என்ற கன்னட மொழி திரைப் படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் , கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , தனது 72 வயதில் நேற்று (நவ.14) இயற்கை எய்தினார்.வீ. சேகருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர்.