
வெள்ளிக்கிழமை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப் திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்க வெளியாகிக்கொண்டே இருகின்றன. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்துடன் திரைப்படத்தை வந்த ரசிக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் இன்று தனுஷின் ‘குபேரா’ வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துடன் அதர்வா முரளியின் டி.என்.ஏ மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களும் இன்று வெளியாக உள்ள நிலையில் எந்த படம் ரசிகர்களின் மனதை கவரும் என்பதை வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று (ஜூன் 20-ம்தேதி) திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
குபேரா :
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இன்று வெளியாகும் குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். தனுஷின் நேரடி தெலுங்கு படமான குபேராவில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மற்றும் இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் ஜிம் சர்ப், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
டி.என்.ஏ :
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'டி.என்.ஏ'. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஆக்சன் திரில்லர் பாணியில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் :
விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியாகிறது.