

தனது இயல்பான நடிப்பு திறமையால் இளம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கலைப்பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாகவே மாறிவிட்டார்.
சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பராசக்தி சிவகார்த்திகேயனின் 25-வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. அதேசமயம் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப்படங்களை இயங்கிய சுதா கொங்கரா பராசக்தி படத்தை இயங்குவதால் இந்தப் படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது எனறே சொல்லலாம்.
இந்த படத்தின் மூலம் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்து அனைவரையும் மிரட்ட வருகிறார் ரவி மோகன்.
சமீபகாலமாக இவரது படங்கள் தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த படம் அவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ராணா, பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் இப்படம் அவருக்கு 100வது படமாகும். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலின் புரோமோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று (நவம்பர் 4-ம்தேதி) மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இப்படம் பீரியட் அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருவதால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது என பலரும் நம்புகின்றனர்.
அதுமட்டுமின்றி இயக்குனர் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனின் 25-வது படம், ஜிவி பிரகாஷின் 100-வது படம், ரவி மோகனின் வில்லன் அவதாரம் என பல சிறப்பு அம்சங்கள் இந்த படத்தில் ஒன்று சேர்ந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.