‘பராசக்தி’யால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்!
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன், 2012-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 2013-ல் வெளியான வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது எனலாம். படிப்படியாக தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது இயல்பான நடிப்பு மற்றும் கமொடியை பார்த்து ரசிப்பதற்கென்ற தனி பெண் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
சமீபகாலமாக தொடர் தோல்வியை சந்தித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் ஆறுதலை தந்தது. அமரன் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் ஜெயம் ரவி வில்லான அறிமுகமாக உள்ளார். நடிகர் அதர்வா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
SK25 என்று அழைக்கப்படும் இந்த படத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைப்பதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் என்னசெய்வது என்று தெரியாமல் படக்குழு தவித்து வருகிறது.
கலைஞர் கருணாநிதியின் புரட்சிகர வசனங்கள் மற்றும் சிவாஜி கணேசன் உணர்ச்சிகர நடிப்பால் செதுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தலைப்பு இரண்டு மாபெரும் தலைவர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட்டு இன்றும் என்றும் மறக்க முடியாத இடத்தில் உள்ளது. இந்நிலையில், 'சிவகார்த்திகேயன் படத்திற்கு சிவாஜி கணேசனின் பராசக்தி படத்தின் பெயரை வைத்தால் அந்த படத்தின் தனித்துவம் மறைந்து விடும் என்பதை ஏன் யாரும் யோசிக்க வில்லை?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
'திரையுலகில் கதைக்கு பஞ்சம் இருந்த நிலை மாறி இப்போது படத்தின் தலைப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கருத்துள்ள பல பழைய நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைப்பதை போல் சரித்திரம் படைத்த படங்களில் தலைப்பை புதிய படங்களுக்கு வைப்பதன் மூலம் பழைய படத்தின் அசல் தன்மையை மறைக்க பார்க்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு பராசக்தி என்ற பெயரை சூட்டி இருப்பதற்கு உலகெங்கிலும் வாழும் சிவாஜியின் ரசிகர்களும், சினிமாவை நேசிப்பவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வேண்டுமென்றே தமிழ்திரையுல வரலாற்றை சிதைக்க முயற்சிப்பதாக கூறி கண்டனம் தெரிவித்த நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை, பராசக்தி பெயரை மாற்றவில்லையெனில் ரசிகர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த படத்தின் தலைப்பை மாற்ற, நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், நேஷனல் பிக்சர்ஸ் குடும்பத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்பு ’பராசக்தி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, 'மீண்டும் பராசக்தி' என்று பெயர் மாற்றம் செய்து அந்தத் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.