
கிங்ஸ்டன், ஜென்டில்வுமன், மர்மர், எமகாதகி, லெக் பீஸ், நிறம் மாறும் உலகில், அஸ்திரம் மற்றும் படவா என 8 படங்கள் இன்று (மார்ச் 7-ம்தேதி) திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் சில படங்கள் வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் என கருதப்பட்டது. ‘அஸ்திரம்’ படம் வெளியீட்டில் இருந்து பின் வாங்கியதையடுத்து இன்று 7 படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று வெளியாகும் படங்களை பற்றி பார்க்கலாம்.
‘கிங்ஸ்டன்’:
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, நடிகராக வலம் வந்த ஜி.வி. பிரகாஷ் கிங்ஸ்டன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும், திவ்யபாரதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
‘லெக் பீஸ்’:
இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவான நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ரமேஷ் திலக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் வி.டி.வி கணேஷ் , கருணாகரன், வி மரியா, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜார்ன் சர்ராவ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. மணிகண்டன் தயாரித்துள்ளார். இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான கதைக்களமாக அமைந்துள்ளது.
‘மர்மர் ’:
ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவு செய்ய ரோகித் படத்தொகுப்பை செய்துள்ளார். உண்மையாகவே அமானுஷ்ய சம்பவ உணர்வை பார்வையாளர்க்கு வழங்கும் வகையில் இப்படம் ‘ஃபவுண்ட் ஃபுட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எமகாதகி’:
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சரங் பிரதார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சுஜித்தும், பின்னணி இசையை செஜின் ஜார்ஜ் செய்துள்ளனர். இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுகிறது.
‘படவா’:
கே.வி. நந்தா இயக்கியுள்ள இந்தப் படத்தில் விமல் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீரீதா நாயகியாகவும், கேஜிஎப் ராம் வில்லனாகவும் நடித்துள்ளனர். மற்றும் தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர். சரவண சக்தி, சாம் உள்பட 40-க்கும் மேற்பட்ட நடிகர்- நடிகைகள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜான் பீட்டர் இத்திரைப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, வினோத் கண்ணா படத்தொகுப்பை செய்துள்ளார்.
‘நிறம் மாறும் உலகில்’:
ஜே.பி. பிரிட்டோ இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி முக்கியகதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சுரேஷ்மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உட்பட பலர் நடித்துள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, மல்லிகா அர்ஜுன் மற்றும் மணிகண்டா ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளனர். 7 ஜி சிவா தயாரித்துள்ள இந்த படம் நான்கு விதமான வாழ்க்கை, நான்கு விதமான கதை அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கும் படமாகும்.
'ஜென்டில் வுமன்':
ஜோஷ்வா சேதுராமன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் , லாஸ்லியா மரியநேசன் , ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இவர்களுடன் ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், நந்திதா ஸ்ரீகுமார், சுதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சா காதவராயன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். திரைக்கதை மற்றும் வசனங்களை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த படத்தை கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.