விமர்சனம்: ஜென்டில்வுமன் - மேக்கிங் குட் கன்டென்ட் வெரி பேட்!
ரேட்டிங்(3 / 5)
"அரவிந்த் இருக்காரா? நான் அவரை பார்க்கணும்" என ஒரு இளம் பெண் தன் கணவனை தேடி வருகிறார். மனைவியோ கணவனை கொலை செய்து விட்டு பிணத்தை வீட்டில் மறைத்து வைத்துள்ளார். மனைவி எப்படி இதை சமாளிக்க போகிறார் என்ற எண்ணம் ஜென்டில்வுமன் படம் பார்க்கும் நமக்கு வரும் போது சீட் நுனிக்கு வந்து விடுகிறோம். ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் லிஜோ மோல், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் இப்படத்தில் நடித்து உள்ளார்கள் .
நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட பூரணி (லிஜோ மோல்) பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் அரவிந்தை திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் சென்னையில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். திருமணமான மூன்று மாதங்களில் தன் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கும் பூரணி கோபத்தில் கணவனை கொலை செய்து விடுகிறார். வீட்டில் பிணத்தை மறைத்து வைக்கிறார்.
அரவிந்தின் தோழியான அனா (லாஸ்லியா) அரவிந்த்தை தேடி வீட்டிற்கு வருகிறார். பூரணி மீது சந்தேகம் கொள்ளும் அனா காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள். அனா கொலை செய்த தன் கணவனின் 'முன்னாள் காதலி' என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த இரண்டு பெண்களும் என்ன செய்தார்கள்? போலீஸ் இந்த கொலை செய்தது யார் என்று கண்டுபிடித்தார்களா? என்று சொல்கிறது ஜென்டில்வுமன்.
திரில்லர் படத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று கொலையாளி யார்?என்று கண்டுபிடிப்பது மற்றொன்று கொலையாளியை முதலில் காட்டிவிட்டு, கொலையாளி எப்படி போலீஸாரிடம் இருந்து தப்பிக்கிறார் என்று காட்டுவது. இப்படம் இரண்டாவது வகையை சார்ந்தது. பூரணி போலீஸ் விசாரணையை எதிர் கொள்ளும் போது நமக்குள் எங்கே மாட்டி கொள்ள போகிறாரோ என்ற பதைபதைப்பு நமக்குள்ளும் வந்து விடுகிறது. எங்கேயும் தொய்வில்லாமல் காட்சிகள் செல்கின்றன. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் காட்சிகளை மெருகேற்றுகிறது.
"கண்டிப்பா அவர்தான் வேணுமா" என்று ஒரு டயலாக்கை லிஜோ சொல்லி விட்டு ஒரு லுக் விடுகிறார் பாருங்கள் சாய் பல்லவிக்கு பின் ஒரு 'நடிப்பு ராட்சசி' உருவாகி விட்டார் என்று சொல்ல தோன்றுகிறது. கணவனை கொலை செய்து விட்டு மிக சாதாரணமாக டிபன் சாப்பிடுவது, போலீஸ் விசாரணையை பயமின்றி எதிர் கொள்வது என காட்சிக்கு, காட்சி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் லிஜோ. லாஸ்லியா நடிப்பில் தன் பங்கை சரியாக செய்துள்ளார்.
மேக்கிங், நடிப்பு என படம் சரியாக இருந்தாலும் கருத்தியல் ரீதியாக இது தவறான படம் என்றே சொல்லாம். நம் நாட்டில் குடும்ப வன்முறைகள் அதிகமாகி விட்டது. இதை தவிர்க்க கணவன் - மனைவிக்குள் கவுன்சிலிங், உளவியல் அணுகுமுறை போன்ற பல விஷயங்கள் உள்ளன. இந்த இரண்டும் சராசரியாக வராவிட்டால் விவாகரத்து உள்ளது. கணவன் தவறு செய்திருந்தாலும் கொலை செய்வது தீர்வாகது. கொலை செய்த மனைவியின் எதிர் காலம் என்ன ஆகும்?
இன்று படித்த பெண்கள் பல்வேறு சாதனைகள் செய்கிறார்கள். ஆனால் இப்படத்தின் படித்த நாயகி கதாபாத்திரம் கையில் அருவாளை எடுக்கிறது. பெண்ணுரிமை - பெண்ணியம் என்பது ஆயுதம் எடுப்பது அல்ல. அறிவால் ஒரு விஷயத்தை அணுகுவது. பெண்ணியம் என்ற விஷயத்தை தவறான புரிதலில் சொல்லி இருக்கிறார் டைரக்டர். சர்வதேச பெண்கள் தினத்தில் தவறான பெண்ணியம் பேசும் படமாக வந்துள்ளது ஜென்டில்வுமன். இப்படம் மேக்கிங்கில் நன்றாக உள்ளது. கருத்தியல் ரீதியாக தவறாக உள்ளது.