
கடத்தல், போதைப்பொருள்கள், நிழலுலக தாதாக்கள் என்று வந்துவிட்டால் இந்திப் படத் தயாரிப்பாளர்கள் குஷியாகிவிடுவார்கள். எவ்வளவு படங்கள், தொடர்கள், சீரிஸ்கள் வந்தாலும் அவர்கள் சலிப்பதில்லை. இப்படியிருக்க பெண்களாகச் சேர்ந்து தொடங்கும் ஒரு கடத்தல் தொழில் ஆண்கள் கோலோச்சும் உலகத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறது. அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன. அவர்கள் இந்தத் தொழிலில் இறங்குவதற்கு உண்டான காரணங்கள் என்ன என்று சொல்லியிருக்கும் சீரிஸ் தான் நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள டப்பா கார்ட்டல்.
மும்பை, தானே என்றாலே அந்த டப்பா வாலாக்கள் செய்யும் சேவைகளைப் பிரிக்க முடியாது. அப்படியொரு சேவையைப் போதைப்பொருள் கடத்தவும், விநியோகிக்கவும் பயன்படுத்தும் இரண்டு பெண்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்களுடன் இணையும் ஒரு வீட்டு தரகர் பெண், ஒரு பெண்ணின் மாமியார், துணிக்கடை வைத்து நஷ்டமடைந்து நிற்கும் ஒரு பிசினஸ் பெண்மணி. இவர்களை மிரட்டும் ஒரு மிகப்பெரிய தாதா. இவர்கள் அதிலிருந்து வெளியில் வந்தார்களா? இவர்கள் குடும்பங்களுக்கு என்ன ஆனது? என்பது தான் கதை.
விவாலைப் சொசைட்டி என்ற பெயரில் உள்ள ஒரு குடியிருப்பில் சிறிய அளவில் உணவு சமைத்து டப்பாக்கள் மூலம் விநியோகித்து வரும் பெண் ஷாலினி பாண்டே. அவர்கள் வீட்டில் பணிபுரியும் நிமிஷா சஜயன் இருவரும் சேர்ந்து உணவுடன் ஹெர்பல் வயகரா என்ற பொருளையும் சேர்த்து விநியோகிக்கிறார்கள். தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வரும் நிமிஷாவிற்கு ஒரு காதலன். அவன் கஞ்சா கடத்தல் உள்பட பல கடத்தல்களில் ஈடுபட்டு வருபவன் என்று தெரிய வருகிறது. அவனிடமிருந்து விலக நினைக்கும்போது அவன் ஒரு அந்தரங்கமான வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி அந்த டப்பாக்களில் கஞ்சாவையும் சேர்த்து விநியோகிக்க வைக்கிறான். இப்படி ஆரம்பிக்கும் விஷயம் வேகமாகப் பரவி ஒரு ஆபத்தான நிலையில் வந்து நிற்கிறது. தனது மருமகளும், அந்தப் பெண்ணும் சேர்ந்து ஒரு தவறான ஆளிடம் மாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்த மாமியார் ஷபானா ஆஸ்மி, இவர்களுக்கு உதவ முன் வருகிறார். அவருக்கு ஒரு இருண்ட கடந்த காலமும் இருக்கிறது. இது ஒரு கதை.
மோடெல்லா என்ற பெயரில் வெளியாகும் மாத்திரை போதை மருந்தாகவும் பயன்படுகிறது. அதற்கு அதில் கலந்துள்ள ஒரு வேதிப்பொருள் தான் காரணம். அதைத் தயாரித்த விவாலைப் என்ற மருந்துக் கம்பெனியின் மீது புகார் வரவே அதை விசாரிக்க வருகிறார் கஜராஜ் ராவ். அவருக்கு உதவிக்கு ஒரு பெண் காவலாளர் நியமிக்கப்படுகிறார் (சாய் தம் ஹான்கர்). இந்த இரண்டும் சங்கமிக்கும் புள்ளி எது?
நன்கு படித்து விவாலைப்பில் நல்ல வேலையில் இருந்தும் குழந்தை பிறந்தபின் அதைக் கவனித்துக் கொள்ள வேலையை விட்டு விடுகிறார் ஜோதிகா. ஒரு மகளிர் பொட்டிக் ஒன்று நடத்தி வருகிறார். வியாபாரம் சரியாக இல்லாமல், கடன் சுமைகளும் அழுத்த ஒரு சந்தர்ப்பத்தில் இந்தப் பெண்கள் குழுவுடன் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவரது கணவர் விவாலைப் நிறுவனத்தில் முக்கியப் பதவி வகிப்பவர்.
முழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் ஆண்களுக்கும் சமமாக வாய்ப்புகள் இருப்பது போல் திரைக்கதை எழுதுவது கடினம். அதில் இந்தக் குழு ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. ஜோதிகாவின் கணவராக வரும் ஜிஸ்ஸு சென் குப்தா, ஷாலினியின் கணவராக வருபவர் என அனைவரும் போதுமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கடைசியில் வந்தாலும் சுனில் க்ரோவர் இயல்பான அதே சமயம் அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமைதியாக அதே சமயம் ஆழமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ஷபானா ஆஸ்மி அனைவரையும் ஓவர்டேக் செய்து விடுகிறார். ஜோதிகாவும் கச்சிதம். ஹிந்தி சீரிஸ் அல்லவா சிகரெட் எல்லாம் பிடித்து அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நிமிஷா, ஷாலினி, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹான்கார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். போதைப்பொருள்கள் குறித்த கதையாக இருந்தாலும் அதில் ரொம்பவும் காட்சிப்படுதாமல் அணுகியிருப்பதற்கே ஒரு பாராட்டு. மேலும் தற்போதைய ஹிந்தி சீரிஸ்களுக்கே உரிய ஆபாசக்கட்சிகளும், வன்முறையும் இல்லாமல் இருப்பது இதம். தன்பாலின ஈர்ப்பு குறித்த காட்சிகள் இருந்தாலும் அவையும் கண்ணியமாகவே காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன.
"இது அசிங்கமாகப் பார்க்கப்படாத, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இடத்தில் சென்று நாம் வாழலாம். இங்கேயும் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சமூகம் ஏற்றுக்கொள்வது போல உனக்குத் தெரியலாம். உங்கள் அலுவலகத்தில் இதைப் பெருமையாகச் சொல்வாயா. உன் அப்பா ஏற்றுக்கொள்வாரா" எனக் கேட்டதும் வரும் மௌனம் தான் மிகப் பெரிய பதில்.
சற்றே நகைச்சுவை, சற்றே பரபரப்பு, புலனாய்வு எனப் பல களங்களில் சென்றாலும் மிக முக்கியமான கட்டத்தில் 'தொடரும்' போட்டு அடுத்த சீசனுக்கு எதிர்பாருங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். இது ஒரு விதமான சாபக்கேடு தான் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் பார்த்தபிறகும் ஒரு நிறைவை அடையாமல் இது போன்று நீட்டிக்கும் பழக்கம் எப்பொழுது போகுமோ தெரியவில்லை. இருந்தாலும் பார்க்கும் வரை மிகவும் போரடிக்காமல் ஒரு யதார்த்தமான பொழுதுபோக்கு கிரைம் திரில்லராகக் கொண்டு சென்றதில் இந்தக் குழுவிற்கு பாதி வெற்றி தான். அடுத்த சீசனுக்கு எதிர்ப்பார்க்கிறோமா என்று கேட்டால் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது தான் பதில்.