தமிழ் சினிமாவில் சமீபகாலமாக யதார்த்த கதைகளில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பாராட்டிப் பேசப் படுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது மணிகண்டன் முக்கிய இடம் பெற்று வருகிறார்.இரண்டு வாரம் முன்பு மணிகண்டன் நடித்து வெளியான காதலர் திரைப்படம் இன்றுவரை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் சமகால இளைஞர்களின் இரு பாலர் நட்பு, காதல் மீது இருக்கும் பார்வை பற்றி இப்படம் பேசியது.
பொறுப்பின்மை, ஆணாதிக்க சிந்தனை, குடி, காதலி மீது பொசசிவ்னஸ் இப்படிப் பல விஷயங்களைத் தனது நடிப்பின் மூலமாக காதலர் படத்தில் காட்டி உள்ளார் மணிகண்டன். இப்படத்தில் இவர் நடித்த அருண் என்ற கதாபாத்திரம் இன்றைய இளைஞர்கள் சிலரைப் பிரதிபலிப்பதாக இருப்பதே இதற்குக் காரணம். கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக இருப்பதால் இவரின் நடிப்பு பாராட்டைப் பெறுகிறது.
மணிகண்டன் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க முக்கிய காரணம் அவருக்கு இருக்கும் எழுத்து பின்புலம்தான். பீட்சா 2 படத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி கணேஷ் நடிப்பில் நாரை எழுதும் சுய சரிதம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான், எட்டு தோட்டாக்கள், புஷ்கர் - காயத்ரியின் விக்ரம் - வேதா படங்களில் நடித்து வந்த மணிகண்டனுக்கு பா. ரஞ்சித் இயக்கிய காலா படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்து மாறுபட்ட நடிப்பால் சபாஷ் சொல்ல வைத்தார்.
"மணிகண்டன் ஒரு மிகச்சிறந்த நடிகர். இதுபோல ஒரு லைவ் கேரக்டரில் இத்தனை சிறப்பாக நடிக்க முடியுமா?" என்று பலரை வியப்படையச் செய்த படம் 2021ல் வெளியான ஜெய் பீம். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான இப்படத்தில் போலீஸ் சித்திரவதையால் உயிரிழக்கும் நபராக நடித்திருப்பார் மணிகண்டன். படம் முழுவதும் இது போன்ற சித்ரவதை காட்சிகள் இருக்கும்.. வளரும் ஹீரோக்கள் இதுபோன்ற கதையில் துணிந்து நடிக்கமாட்டார்கள். மணிகண்டன் தைரியமாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததே இப்பட வெற்றிக்குக் காரணம். இன்றும் வாழ்ந்து வரும் ராசாகண்ணு குடும்பத்தினர் மணிகண்டன் நடிப்பில் ராசாக்கண்ணுவை பார்த்தோம் என்று சொன்னது மணிகண்டன் நடிப்பிற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று சொல்லலாம்.
சோக பின்புலம் கொண்ட யதார்த்த படங்கள் மட்டுமல்ல. நகைச்சுவை கலந்த படங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்று மணிகண்டன் நிரூபித்த படம் சென்ற ஆண்டு வெளியான குட் நைட். குறட்டை பிரச்னையால் பாதிக்கப்படும் ஒரு இளைஞனாக குட் நைட் படத்தில் நடித்திருப்பார் மணி. இன்று தமிழ் சினிமா இருக்கும் சூழ்நிலையில் ஒரு ஹீரோவிடம் சென்று " சார் படத்தில் நீங்கதான் ஹீரோ, உங்களுக்குக் குறட்டை பிரச்சனை இருக்கு" என்று சொல்லக்கூட முடியாது. புது இயக்குநர்களின் புதிய சிந்தனைகளுக்கு வரவேற்பு அளிக்கிறார் மணிகண்டன்.
ரேடியோ ஜாக்கி, எழுத்தாளர், டப்பிங் எனப் பன்முக திறமை கொண்டவர். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பதும் மணிகண்டன் கதாபாத்திர தேர்வில் சரியாக இருக்கக் காரணமாக இருக்கலாம். மாறுபட்ட கதைகளுடன் வலம் வரும் புது இயக்குநர்கள் அணுகும் முதல் நபராக இருக்கிறார் மணிகண்டன். இந்த ஆண்டும் மாறுபட்ட கதை களங்களில் மணிகண்டனைக் காணக் காத்திருக்கிறோம்!