பல தென்னிந்திய நடிகர்களின் ஒரே கனவு என்றால் அது பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதுதான். அந்தவகையில் ஜி.வி.பிரகாஷ் குமார் விரைவில் பாலிவுட்டில் களமிறங்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
2006ம் ஆண்டு வசந்த் பாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ் குமார். தனது முதல் படத்திலேயே 'உருகுதே மருகுதே', 'வெயிலோடு விளையாடி' போன்றப் பாடல்கள் மூலம் ரசிகர்களின் அன்பை முழுவதுமாகப் பெற்றுத் தன்னை யார் என்றுத் தேடவைத்தார். அதிலிருந்து இசையமைப்பில் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்றுக் கலக்கி வருகிறார். இசையமைப்பில் கலக்கி வந்த ஜி.வி.பிரகாஷ் 2015ம் ஆண்டு நடிப்பில் களமிறங்கி ஒருப் புது அவதாரத்தை எடுத்தார்.
அவர் நடித்த முதல் படம் டார்லிங் என்ற பேய் படமாகும். மறைமுக வெற்றிகளைக் கொடுத்து வந்த இவர், அந்தப் படத்திலிருந்தே ரசிகர்களிடம் முகத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்னர் குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், தலைவா ஆகிய படங்களில் பாடல்களில் வந்து ஒரு கேமியோ ரோல் மட்டும் செய்துவிட்டு செல்வார். நடிப்பில் களமிறங்கியவுடன் சில காலம் சிறப்பானப் பாடல்களை அவரால் தர முடியவில்லை. ஆனால் அதனையும் சில காலத்தில் சரிசெய்து இரண்டிலுமே மாஸ் காட்ட ஆரம்பித்தார்.
அந்தவகையில் இந்த ஆண்டு மட்டுமே அவருக்கு நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்டப் படங்களும் இசையமைப்பில் 10 க்கும் மேற்பட்ட படங்களும் கைவசம் உள்ளன. ஏற்கனவே பிஸியாக உள்ள ஜி.வி.பிரகாஷ் சென்ற ஆண்டு இறுதியிலேயே பாலிவுட்டில் களமிறங்கப்போவதாகச் செய்திகள் வந்தன. தற்போது பாலிவுட்டில் அவர் நடிக்கும் படத்தை இயக்கப்போவது அனுராக் கஷ்யப் என்பது தெரியவந்துள்ளது. இவர் ஒரு பாலிவுட் இயக்குனர் ஆவார். தமிழில் படங்கள் தயாரித்தாலும் நடித்தாலும் தமிழ் படங்களை இன்னும் இவர் இயக்கவில்லை. சமீபத்தில் கூட இவர் லியோ படத்தில் கேமியோ ரோல் செய்தார்.
தற்போது அனுராக் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். அதேபோல் ஜி.வி. அதே படத்தில் நடிகராக ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். ஏனெனில் இப்படத்தை இந்தியில் முழுவதுமாக எடுத்துவிட்டுப் பின் தமிழில் டப்பிங் செய்யப்படும் ஒரு இருமொழிப் படம் என்பது தெரியவந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.