Interview: 'பிளாக்மெயில்' படத்தின் பின்னால் இப்படி ஒரு கதையா? - இயக்குனர் மு.மாறன் ஓபன் டாக்!
இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ், பிந்து மாதவி, ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியாகி உள்ள 'பிளாக் மெயில்' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் மு.மாறன் படம் குறித்து அளித்த நேர்காணல் இங்கே...
(மு.மாறன் அவர்கள் நமது கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர்.
பிளாக்மெயில் வந்துள்ளது. ஸ்கிரிப்ட் எழுதும் போதே ஜி.வி.யை மனதில் வைத்து எழுதியது போல், இதுவரை ஜி.வி பிரகாஷ் நடித்த படங்களில் ஒரு வித்தியாசமான படமாக உள்ளதே?
எழுதும் போது ஜி.வி மனதில் இல்லை. எழுதி முடித்த பின் 'பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன்' என்ற கேரக்டர்க்கு ஜி.வி சரியாக இருப்பார் என்று மனதில் தோன்றியது. உடனே கதை சுருக்கத்தை ஜி.விக்கு அனுப்பினேன். உடனே ஜி.வி ஒகே சொன்னார்.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்க என்ன காரணம் சமீப கால மலையாள த்ரில்லர் படங்களின் பாதிப்பா?
கதை சொல்ல செல்லும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் த்ரில்லர் கதை இருக்கிறதா? என்று தான் கேட்கிறார்கள். என்னிடம் ஒரு வேளை பேமிலி டிராமா கதையை கேட்டிருந்தால் குடும்ப கதையை தந்திருப்பேன்.
பிந்து மாதவி சமீபத்தில் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடித்த ரகசியம் என்ன?
ரகசியம் ஒன்றுமில்லை. பிளாக் மெயில் படம் ஆந்திராவில் வெளியாகும் போது தெலுங்கு படத்தில் மார்க்கெட்டிற்காக பிந்து மாதவியை கமிட் செய்தேன். மேலும் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் ஒரு சிறு குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்த போது பிந்து மாதவி முதல் சாய்ஸ் ஆக இருந்தார்.
படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் இமான் இசை அமைத்துள்ளார். இது விளம்பர யுத்தியா?
இல்லை முதலில் இமான் தான் இசைக்காக கமிட் ஆனார். ஒரு பாடலுக்கு இசை அமைத்தும் தந்தார். ஆனால், அதன் பிறகு சில காரணங்களால் இமானால் தொடர முடியவில்லை. சாம் C.S. உள்ளே வந்தார்.
ஊட்டி, கோவை இரண்டு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளீர்கள்? எந்த இடத்தில் கடினமாக இருந்தது?
கண்டிப்பாக ஊட்டி தான். ஊட்டியில் முதல் நாள் ஷூட்டிங் நடந்த போது எதிர்பாராத விருந்தாளியாக கரடி வந்து விட்டது. நல்ல வேளையாக கரடி யாரையும் ஒன்றும் செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. பிறகு படப்பிடிப்பை தொடர்ந்தோம். இருந்தாலும் மீண்டும் கரடி வந்து விடுமோ என்ற பயம் இருந்தது. சென்னையை போலவே கோவையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதுவும் சற்று படப்பிடிப்பு நடத்த இடையூறாக இருந்தது.
படத்தில் முக்கிய குற்றமாக வரும் 'கணவன் - மனைவி எல்லை தாண்டிய உறவு' என்ற பிரச்சனையை மையமாக எடுக்க என்ன காரணம்?
இப்போது நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே இன்றைய செய்தித்தாளில் இது போன்ற தவறான எல்லை தாண்டிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் என்ற செய்தியை படித்து கொண்டிருக்கிறேன். இது போன்ற செய்திகள் வாரம் ஒரு முறை கண்ணில் படுகிறது. இவர்களால் இவர்களது குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதை பற்றி ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காகத்தான் 'எல்லை தாண்டிய உறவால்' வரும் குற்றத்தை பற்றி படம் தந்தேன்.