Interview: "என் நம்பிக்கை திரையில் புரியும்!" - RJ Balaji Venugopal on 'Kumaara Sambavam'!
கடந்த இருபது ஆண்டுகளாக தனது தனித்துவமான குரலால் தமிழக மக்களிடம் பரிச்சியம் ஆனவர் RJ பாலாஜி வேணுகோபால். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். லக்கி மேன் என்ற படத்தையும், பானி பூரி என்ற வெப் தொடரையும் இயக்கி உள்ளார். பாலாஜி வேணுகோபால் இயக்கி உள்ள 'குமார சம்பவம்' திரைப்படம் இன்னும் ஒரிரு நாட்களில் திரைக்கு வர உள்ளது. இவரை சந்திக்க இவர் அலுவலகம் சென்றால், மாறுபட்ட ஹேர் ஸ்டைலில் வித்தியாசமாக காட்சி அளித்தார்! அதை வைத்தே நம் பேட்டியை தொடங்கினோம்...
நீளமா வித்தியாசமா உங்க ஹேர் ஸ்டைல் இருக்கே. ஏதாவது படத்தில் நடிக்கிறீங்களா...?
படத்தில் எதுவும் நடிக்கவில்லை. சும்மா வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான் இப்படி ஹேர் ஸ்டைல் வைச்சுகிட்டேன். மத்தபடி யாருடைய இன்ஸ்பிரேஷனும் இல்லை.
'குமார சம்பவம்'ன்னு கவித்துவமான தலைப்பு வச்சிருக்கீங்க?
இங்க காளிதாசர் பத்தி நம்மில் பலருக்கு தெரியாது. இந்த படம் டைட்டிலை பார்த்த பின்பு காளிதாஸர் யார்? என்று நம்மில் ஒரு சிலராவது தேடுவார்கள் என்ற எண்ணமும் இந்த டைட்டில் வைக்க ஒரு காரணம். இந்த படத்தில் ஹீரோவின் பெயர் குமரன். குமரன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்கள் என்ன என்பதை சொல்லும் விதமாகவும் குமார சம்பவம் என்று டைட்டில் வைத்திருக்கிறேன்.
குமார சம்பவம் என்ன சொல்ல வருகிறது?
வாழ்க்கையில் எமோஷன்ஸ் எந்த அளவு முக்கியம் என்பதை ஒரு திரில்லர் அனுபவத்தில் சொல்ல வருகிறது. நகைச்சுவையும் இருக்கிறது. படம் பார்த்த பின் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
டிவி சீரியல் நடிகர் குமரன் தங்கராஜன் ஹீரோவாக நடிக்கிறாரே... பெரிய திரையில் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
பாண்டியன் ஸ்டோர் வழியாக மக்கள் வீடுகளில் குமரன் தங்கராஜன் நுழைந்து விட்டார். இதனால் பெரிய திரையிலும் இவரை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளேன். குமரன் நடிப்பை திரையில் பார்க்கும் போது என் நம்பிக்கையின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.
கடந்த இருபது ஆண்டுகளாக ரேடியோ ஜாக்கியாக இருக்கிறீர்கள்... பிறகு நடிகன், டைரக்டர் என்று பயணம் செய்கிறீர்கள், எப்படி இருக்கிறது இந்த பயணம்?
RJ வாக என் பயணத்தை தொடங்கும் போது, பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. 'நன்றாக பேசுகிறான்' என, மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு தந்தார்கள். பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. இப்படி ஒன்று மற்றொன்றிற்கு அழைத்து சென்றது. நான் RJ வாக அறிமுகம் ஆன சமயத்தில் என்னுடன் இருந்த பலர் இன்று RJ வாக இல்லை. ஆனால் நான், மிர்ச்சி சிவா, 'பிளேட்' ஷங்கர் என மூன்று பேர் மட்டும் இருபது ஆண்டுகளாக RJ வாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் மூவர் மட்டும் தான் அதிக வருடங்கள் RJ வாக இருப்பவர்கள் என்பதை பெருமையுடனும், உறுதியுடனும் சொல்வேன்.
சமீபத்தில் ரேடியோவில் நேயர்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் நீங்கள் வியந்த விஷயம் எது?
கடலூரில் ஒரு 72 வயது பெரியவர் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்கிறார் என்ற செய்தியை படித்தேன். இந்த செய்தியை மையமாக கொண்டு படிக்கும், கற்று கொள்ளும் வயதில் படிக்க முடியாமல், வயதான பின்பு படித்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொண்டேன். நாற்பது, ஐம்பது வயதிற்கு மேல் பட்டம் பெற்றவர்கள், நடனம் கற்று கொண்டவர்கள், இசை கற்று கொண்டவர்கள் என பலர் எனக்கு நிகழ்ச்சியில் போன் செய்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதில் பலர் பெண்கள். இவர்களுக்கு இவர்களது குடும்பம், குறிப்பாக கணவர் சப்போர்ட்டிவாக இருக்கிறார்கள். இதை இவர்கள் சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நம் எண்ணங்கள் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது, சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை இவர்களது உரையாடல் புரிய வைத்தது. "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்" என்பதை இது புரிய வைத்தது.
அதிக படங்கள் இயக்கும் வாய்ப்பு வந்தால், நேரமின்மையால் RJ பணியை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதா?
ஹலோ பண்பலை நிறுவனம் என் குடும்பம் போல். குடும்ப உறுப்பினர் ஒருவர் வளர்ச்சி அடையும் போது, குடும்பத்தின் தலைமை சரியான முடிவுகளை எடுக்கும். என் குடும்பமான ஹலோ பண்பலை சரியான பாதையை காட்டும் என நம்புகிறேன்.