
“நம்ம கூட இருக்குறவங்கள நாம பாத்துக்கிட்டா..! நமக்கு மேல இருக்கிறவன் நம்மள பாத்துக்குவான்..!” என்று படத்திற்காக மட்டும் இந்த வசனத்தை கூறாமல், தனது வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொண்டு தலைக்கனம் இல்லாமல், தன் புகழ்ச்சியை ஏற்காமல், தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வரும் தன்னலமற்ற எங்கள் அண்ணன் அஜித் குமார் அவர்களுக்கு இன்று 54வது பிறந்தநாள்! பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா..!
வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களை நினைவுபடுத்தும் விதமாகவும், 8 மணி நேர உழைப்பை வலியுறுத்திப் போராடி வெற்றி கண்டதை கொண்டாடும் நாளாகவும் மே-1 உழைப்பாளர்கள் தினமாக நாம் கொண்டாடுகிறோம்.
அப்படிப்பட்ட உழைப்பாளர்களுக்கு பல உதவிகளை, யாருக்கும் தெரியாமல் உதவி இருக்கிறார், எங்கள் அண்ணன் அஜித் குமார் அவர்கள். பிரபலமாகுவதற்காகவே உதவி செய்யும் இந்த காலத்தில், தான் ஒரு பிரபலம் என்பதையே மறந்து உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்.
உழைப்பாளர் தினத்தில் பிறந்து பல கஷ்டங்களை வலிகளை கடந்து, இப்போது நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை வாங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
இந்த விருது சாதாரணமாக கிடைக்கவில்லை..! இது அவருக்கு தன்னம்பிக்கைக்காக கிடைத்த விருது..!.
சினிமாவில்... குடும்ப உணர்வுகளை வீரத்தின் மூலமும், நண்பனின் துரோகத்தை விவேகத்தின் மூலமும், அப்பா மகளின் பாசத்தை விஸ்வாசத்தின் மூலமும், கணவன் மனைவி ஒற்றுமைகளை விடாமுயற்சி மூலமும், நமக்கு திரையில் நடித்து வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
தன் மீது தன்னம்பிக்கை கொண்டதனால் தான் இப்போது தாயகம் போற்றும் தங்க மகனாக உயர்ந்திருக்கிறார். மேடையில் ஏறி மைக்கை பிடித்தது இரண்டு மூன்று தடவை தான். ஆனால் பல பேரை கையைப் பிடித்து மேலே தூக்கி விட்டதில், பல தடவை மக்களின் மனம் என்கிற மேடையில் ஏறி இருக்கிறார்..!.
பல படங்கள் நடித்து பல கோடி சம்பளம் வாங்கினாலும் தனது அன்பான ரசிகர்களை பார்த்து, “முதல்ல உங்களோட குடும்பத்த பாருங்க..! நீங்க நல்லா உழைக்கணும், வாழ்க்கையில முன்னேறனும்..! எப்பவுமே சினிமாவ ஒரு பொழுதுபோக்கா மட்டுமே பாருங்க..!”என்று கூறியுள்ளார்.
இவ்வளவு உச்சியில் இருந்தும் ஒரு தலைக்கனமும் இல்லாமல், தன்னடக்கத்தோடு இருப்பதினால் தான், இன்று வரை பல சாதனைகளை படைக்க முடிகிறது. அதில் குறிப்பிட்ட சாதனை என்று சொன்னால் கார் பந்தயம் தான். தனது இலட்சியத்தையும் தாண்டி, தனக்கு விருப்பமான துறையில் சாதிப்பது என்பது மிக கடினம் தான்..! ஆனால் தன்னம்பிக்கை என்ற மூலதனம் இருந்தால் அது சுலபம்தான்.
தரையில் கண்ட வலிகளை விட, திரையில் கண்ட வலிகளே அதிகம்..! வலிகளை கடந்து, தமிழ் சினிமா துறையில் பல படங்களை நடித்து, மிகப்பெரிய உச்சிக்கு சென்றும் கூட எனக்கு எந்த ஒரு பட்டமும் தேவையில்லை, 'எனக்கு எனது பெயரே போதும்' என்று சொன்ன உன்னதமான கலைஞன் தான் நம் அஜித் குமார்.
தல, கடவுளே அஜித், அல்டிமேட் ஸ்டார் என்ற இது போன்ற பட்டங்களை நாம் அவருக்கு கொடுப்பதை விட, நாம் அவரிடம் இருந்து பல வாழ்க்கை பாடங்களை பெற்றுக் கொள்வது தான் சிறந்தது.
தனது திறமைகளை தாண்டி தன்னம்பிக்கையால் முன்னேறி இன்று சமூகத்தில் ஒரு தவிர்க்க முடியாத மாமனிதனாக உயர்ந்திருக்கிறார், நம் மனதின் நாயகன் அஜித் குமார் அவர்கள். நல்ல நடிகரை தாண்டி, நல்ல மனம் படைத்தவர்!