மூன்று எழுத்து மந்திரம் ரஜினி... இது வெறும் பெயரல்ல... தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம்..!

ரஜினி
ரஜினி
Published on

ஒரு நடிகர் ஒரு தசாப்த காலம் சினிமாவில் நிலைத்து இருப்பதே மிகப்பெரிய சாதனை. ஆனால் , இங்கு ஒரு நடிகர் திரையுலகில் பொன்விழா ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறார் என்பது சாதனை மட்டுமல்ல , அதையும் தாண்டி அது ஒரு மாபெரும் சகாப்தம். ஒரு நடிகரின் திரைப்படம் வெளிவரும் நாளன்று திருவிழா போல ஊரே கொண்டாடினால் , அது ரஜினியின் திரைப்படம் என்று அறிக. அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த இந்த சினிமா பயணம் கூலி வரை வெற்றிகரமாக தொடர்கிறது. 

ரஜினியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அவரது தனித்துவமான ஸ்டைல் தான். அதனாலயே ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் என்ற பட்டப்பெயரும் அவருக்கு உண்டு. வேகமான நடை , தனித்துவமான டயலாக் டெலிவரி, தீர்க்கமான பார்வை , அலைபாயும் கேசம் கருமையான நிறம் ஆகியவை தான் ரஜினியின் தனித்துவம். ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடிக்கும் போதே  , அவரது ஸ்டைல் அனைவருக்கும் பிடித்து அப்போதே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிய தொடங்கியது.

பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் பரட்டையாக நடித்த ரஜினியின் வில்லன் கதாபாத்திரம், இன்று வரை மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது. அந்தப் படத்தில் ரஜினியின் ஒவ்வொரு டயலாக்கும் மக்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டது. பொதுவாக இன்றைய தலைமுறையினரிடம் ரஜினிகாந்த் ஸ்டைலாக மட்டுமே நடிப்பார் , சவாலான கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க மாட்டார் என்று பேச்சு நிலவுகிறது. ஆனால் , ரஜினி தமிழ் சினிமாவில் சிவாஜி , கமல் , வரிசையில் வைக்கப்பட வேண்டிய மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். ஏனென்றால் பரட்டையாக , காளியாக வேறு ஒரு நடிகராகராலும் இந்தளவிற்கு நடிக்கவே முடியாது.

இயக்குனர் மகேந்திரன் 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் காளியாக ரஜினியின் நடிப்பை மெருகேற்றி இருப்பார். அண்ணன் தங்கை பாசக்கதை என்றால், அது சிவாஜியின் பாசமலரை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும். ஆனால், முள்ளும் மலரும் காளி அப்படி இல்லை. பாசக்கார அண்ணனாகவும் , கோவக்கார இளைஞராகவும் , ஊர் பஞ்சாயத்துகளை தீர்ப்பவராகவும் , யாருக்கும் அடங்காத காளியாகவே நடித்திருப்பார். தனது இமேஜ் பற்றி கவலைப்படாமல் ஒரு கையுடன் நடித்த ரஜினியின் துணிச்சல் வேறு நடிகருக்கு வராது. ரஜினியின் கோபமும் , சரத்பாபுவை மீறி எதையும் செய்ய முடியாத போது, அவர் காட்டும் இயலாமையின்  உச்சபட்ச நடிப்பும் தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிது. 

ரஜினிகாந்தின் 'ஆறிலிருந்து அறுபது வரை' திரைப்படம் பார்த்தவர்களுக்கு தான் தெரியும் , சந்தானம் எவ்வளவு பாவப்பட்டவன் என்று . அதற்கு முன் சோகமான திரைப்படங்களில் அதிக  அழுகாட்சி சீன்களும் , அதிக சோகமான வசனங்களும் , சோகப் பாடல்களும் இருக்கும். ஆனால் , இந்த திரைப்படத்தில் ரஜினியின் முகபாவங்கள் மட்டுமே அவரது இயலாமை , வறுமை , ஏமாற்றம் , துயரம் , துரோகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும். ரஜினியின் நல்ல நடிப்பை மட்டும் நம்பி புவனா ஒரு கேள்விக்குறி , ஆடு புலி ஆட்டம் , ஆறிலிருந்து அறுபது வரை என்று சோகம் கலந்த திரைப்படங்களை மட்டும் எடுத்து வந்த இயக்குனர் எஸ். பி. முத்துராமன் திடீரென்று தன் ட்ராக்கை கமர்ஷியலுக்கு மாற்றி ரஜினியையும் சூப்பர் ஸ்டாராக மாற்றினார். 

முரட்டுக்காளை மூலம் ரஜினியை மசாலா திரைப்படங்களில் நடிக்க வைத்தவரும் எஸ்.பி.முத்துராமன் தான். கிட்டத்தட்ட 20 திரைப்படங்களுக்கும் மேலாக இந்த கூட்டணி, நிறைய வெற்றி பெற்ற திரைப்படங்களை கொடுத்துள்ளது. 80 களின் தொடக்கத்தில் ரஜினி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,ஹிந்தி ,பெங்காலி என பல மொழிகளில் நடித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் ,ஒவ்வொரு மொழிகளிலும் ரஜினி நடித்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது தான். 

இது மட்டுமல்லாமல் ரஜினி தான், இந்தியாவிலே அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள் உடன் நடித்த ஒரே சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பார். ராஜேஷ் கண்ணா , தர்மேந்திரா , அமிதாப் பச்சன், அமீர்கான் , ஷாருக்கான் என 5 பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர் தென்னிந்திய சினிமாவில் ரஜினி மட்டும் தான். மேலும் பெங்காலி சூப்பர் ஸ்டார் மிதுன் சக்கரவர்த்தி , கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணு வர்த்தன் , தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி , மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என்று அனைவருடன் சேர்ந்து ரஜினி வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

50 ஆண்டுகளை தொட்டும், தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் தொட முடியாத அளவிற்கு உச்ச மார்க்கெட் வைத்திருக்கும் நடிகராகவும் ரஜினி இருக்கிறார். இந்தியாவின் 3 உயரிய குடிமை விருதுகளை பெற்றும் உள்ளார். கே. பாலசந்தர் கொடுத்த வாய்ப்பில் ஆரம்பித்து இன்றைய டிரண்டிங் இயக்குனர் நெல்சன் வரை வாய்ப்பு கொடுத்து , தன்னை எப்போதும் புது நடிகராகவே வைத்துக் கொள்வதில் தான் ரஜினியின் வெற்றி இருக்கிறது.

வைரவிழாவை கொண்டாடும் தமிழ் சினிமாவின் என்றும் ஓடும் குதிரையாக ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 

இதையும் படியுங்கள்:
இனி பான் கார்டு சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது... எந்தெந்த ஆவணங்கள் செல்லும் தெரியுமா.?
ரஜினி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com