

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டையாக ஆதார் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள் முதல் அரசு சலுகைகள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் அவசியத் தேவையாக உள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள, இனி பான் கார்டு சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொண்டால், அப்டேட் ஆக பல நாட்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில், இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் கார்டில் தவறுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி மற்றும் புகைப்படத்தை மாற்றுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
ஆதார் கார்டு திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகன்றன. குறிப்பாக அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிக் கூடங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பலரும் ஆதார் சேவை மையங்களை அணுகி திருத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள பான் கார்டு முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. ஏனெனில் மத்திய அரசு வழங்கும் பான் கார்டில் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் ஆகியவை இருக்கும். இந்நிலையில் இனி ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் இருந்து பான் கார்டை நீக்கியுள்ளது ஆதார் ஆணையம். இதனால் இனி பான் கார்டைக் கொண்டு பொதுமக்களால் பெயர் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.
ஆதார் அட்டையைப் பொறுத்தவரை இதுவரையில் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற 2 ஆவணப் பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இதனை 4 ஆவணப் பட்டியல்களாக அதிகரித்துள்ளது ஆதார் ஆணையம்.
இதன்படி தற்போது 5 வயதுக்கு உட்பட்டவர்கள், 5 -18 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 ஆவணப் பட்டியல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் திருத்தம் மேற்கொள்ள பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்த நிலையில், இதனை நீக்கியுள்ளது ஆதார் ஆணையம்.
இதுகுறித்து UIDAI வெளியிட்ட அறிக்கையில், “பான் கார்டில் முகவரி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், ஆவணப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் பான் கார்டு என்பது ஒரு வரிவிதிப்பு தொடர்பான ஆவணம் மட்டுமே; ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் அல்ல. ஆகையால் தான் பான் கார்டை ஆவணப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம்.
வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஆதார் கார்டு திருத்தத்தை மேற்கொள்ள சமர்ப்பிக்கலாம்” என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்ட ஒரு வாரத்தில் அப்டேட் ஆக வேண்டும். ஆனால் பலருக்கும் கால தாமதமாக அப்டேட் ஆவதாகவும், சிலருக்கு ஆதார் திருத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பெயர் திருத்தம் மேற்கொள்ள பான் கார்டை ஆவணமாக சமர்ப்பிக்க முடியாது என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.