
தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்த பவன் கல்யான், ஆந்திராவின் துணை முதல்வர் ஆன பிறகும் கூட தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வகையில் இந்த மாதம் இவர் நடித்து பான் இந்தியப் படமாக ரிலீஸாக இருக்கிறது ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம். இப்படம் இந்தியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தி மொழிப் படங்களையும், தென்னிந்தியப் படங்களையும் ஒப்பிட்டு பேசிய பவன் கல்யான்,
“இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தென்னிந்திய சினிமாவில் தான் அதிகளவில் படங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு மொழி திரைப்படத்திற்கும் தனித்துவமான பலம் இருக்கிறது. சினிமாத் துறையில் இந்திய சினிமா என ஒட்டுமொத்தமாக அழைப்பதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன். இதன் ஒரு பகுதி எனக்கு அந்நியமாகவே தோன்றுகிறது.
இந்திய சினிமா உருவான காலகட்டத்தில், அது நம்முடைய கலாச்சாரத்தை நன்றாகவே பிரதிபலித்தது. காலப்போக்கில் பல தலைமுறை சினிமா பிரபலங்களால் இதில் மாற்றமும் உண்டானது. அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கலாச்சார ரீதியான படங்கள் குறைந்து, கேலிக்கூத்தான படங்கள் அதிகரிக்கத் தொடங்கின. பாலிவுட்டில் ‘தங்கல்’ படத்திற்குப் பிறகு கலாச்சார ரீதியான படங்கள் வெகுவாக குறைந்து விட்டன. ஆனால் தற்போதைய சூழலில் தென்னிந்தியப் படங்கள் தான், இந்தியக் கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிக்கின்றன.
வியாபார இலாபம் மற்றும் பணம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதால், பெரும்பாலான கிராமப்புற ரசிகர்களின் தொடர்பை இழந்து நிற்கிறது பாலிவுட் சினிமா. அதே நேரத்தில் தென்னிந்தியப் படங்கள் கலாச்சார ரீதியாக வெளியாகி, கிராமப்புற ரசிகர்களைக் கவர்கின்றன. இதற்கு முக்கிய காரணமே படத்திற்கான பார்வையாளர்களில் 70% முதல் 80% வரை பலரும் கிராமப்புற ரசிகர்கள் என்பது தான். தெரிந்தோ தெரியாமலோ தென்னிந்தியப் படங்கள் கிராமப்புற பின்னணியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதனால் தான் மேற்கத்திய நாடுகள் வரை தென்னிந்தியப் படங்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது”
என தெரிவித்தார்.
தற்போது பெரிய பட்ஜெட்டில் தான் பல படங்கள் பான் இந்திய அளவில் வெளியாகின்றன. இதனால் பல மொழி நடிகர்கள் பான் இந்திய ரசிகர்கள் மத்தியில் விரைவிலேயே பரிட்சையமாகி உள்ளனர். இருப்பினும் கலாச்சாரம் சார்ந்த படங்களின் மூலமாக தான், பல நடிகர்களை ரசிகர்கள் விரைவில் அறிந்து கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.